கிளாஸ்மேட்ஸ் ; விமர்சனம்


கால் டாக்சி டிரைவரான புது மாப்பிள்ளை அங்கையற்கண்ணன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் தனது மாமா ஷரவணசக்தியுடன் சேர்ந்து மது குடிக்க செலவிடுகிறார். இருவரும் மதுக்கு அடிமையாகி தங்கள் மனைவிகளை சந்தேகப்பட குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு இரு குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

இதனிடையே மதுபிரியராக இருந்து மது பழக்கத்தை விட்டு நல்ல மனிதராக குடும்பத்தோடு சந்தோஷமாக வாழும் மயில்சாமியை அங்கையர்கண்ணனும், ஷரவணசக்தியும் சேர்ந்து மயில்சாமியை மீண்டும் குடிக்க வைத்துவிடுகிறார்கள்.

இதனால் இந்த மூன்று பேர் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? தவறை உணர்ந்து மதுப்பழக்கத்தை கைவிட்டார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அங்கையற்கண்ணன் அறிமுக நாயகனாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். மதுபோதையில் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி இருக்கிறது.

நாயகனின் மாமவாக நடித்திருக்கும் ஷரவணசக்தி, வழக்கம் போல் தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் நம்மை சிரிக்க வைக்கிறார். அதே சமயம், சில இடங்களில் அளவுக்கு அதிகமான பேச்சு மற்றும் நடிப்பு என்று ஒவர் டோஸ் கொடுப்பதை தவிர்த்திருக்கலாம்..

நாயகியாக நடித்திருக்கும் பிரனா, கணவன் என்னதான் குடிக்கு அடிமையாக இருந்தாலும், அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பை காட்டி உருகுவது ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்து படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்.

டி.எம்.கார்த்திக், சாம்ஸ், மயில்சாமி ஆகியோர் படத்தைக் கலகலப்பாக நடத்த உதவியிருக்கிறார்கள். மயில்சாமியின் மகளாக வரும் அயலி அபிநட்சத்திரா அருமை.

பிரித்வி இசையில்,சீர்காழி சிற்பியின் வரிகளில் பாடல்கள், கதைக்களத்துக்குப் பலம் சேர்க்கும் வண்ணம் அமைந்து ஆட்டம் போட வைக்கின்றன. அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு, கதை நடக்கும் இராமநாதபுரத்தின் வெளியழகு கதாபாத்திரங்களின் உள்ளழகு ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் அவனது குடும்பத்தில் மது துஷ்பிரயோகத்தின் தாக்கத்தை மையமாகக் கொண்டு திரைக்கதையை குட்டிப்புலி சரவணன் சக்தி எழுதி இயக்கியிருக்கிறார். aanaalபடம் முழுக்க குடிநோயாளிகளின் கும்மாளத்தை உற்சாகமாகக் காட்டிவிட்டுக் கடைசியில் குடி வேண்டாம், அது வீட்டுக்குக் கேடு என்று வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சரவணசக்தி.