ஜப்பான் ; விமர்சனம்


கார்த்தியின் 25வது படம் அதுவும் குக்கூ, ஜோக்கர் போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில்.. அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டி இருக்கிறார்களா படத்தில் ? பார்க்கலாம்.

பிரபலமான கொள்ளையனான கார்த்தி (ஜப்பான்), கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த நபராக இருக்கிறார் கொள்ளையடித்த பணத்தை வைத்து திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, ஆடம்பரமாகவும் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே கோவையில் உள்ள ஒரு பெரிய நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தின் பழி கார்த்தி மீது விழுகிறது. செய்யாத குற்றத்திற்காக போலீஸ் தன்னை துரத்த அவர்களிடம் இருந்து தப்பித்து செல்லும் கார்த்தி ஒரு கட்டத்தில் போலீஸ் பிடியில் சிக்குகிறார்.

அந்த நகைகளை நான் கொள்ளை அடிக்க வில்லை என்றும், இந்த கொள்ளைக்கு சம்பந்தப்பட்டவன் வேறொருவன், அவன் என்னை இதில் மாட்டிவிட்டு தப்பித்து விட்டான் என கூறுகிறார் ஜப்பான். உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் ‘ஜப்பான்’ படத்தின் மீதிக்கதை.

ஜப்பான் என்ற வேடத்தில் தன்னை பொருத்திக் கொள்வதற்காக மெனக்கெட்டிருக்கும் நடிகர் கார்த்தி, அந்த வேடத்திற்காக உடை மற்றும் உருவத்தை மாற்றியதோடு, நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். உடை, உடல்மொழி மட்டும் இன்றி வசன உச்சரிப்பிலும் மாற்றத்தை கையாண்டிருக்கிறார் கார்த்தி, எந்த விசயமாக இருந்தாலும் அதை மிக அலட்சியமாக அவர் கடந்து போகும் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, ஜப்பான் கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறது.

திரைக்கதையில் சில தொய்வுகள் இருந்தாலும், நடிகர் கார்த்தியின் நடிப்பு அந்த குறையை மறைத்துவிட்டு படத்தை ரசிக்க வைத்துவிடுகிறது. அதிலும், கெட்டவனாக இருந்தாலும் ஜப்பான் வேடத்தை ரசிகர்கள் ரசிக்க கூடியதாக கையாண்டிருக்கும் கார்த்தி, படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அனு இம்மானுவேலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை என்றாலும் திரைக்கதை ஓட்டத்துக்கு அவரது வேடம் உதவியாக இருந்திருக்கிறது.

ஜித்தன் ரமேஷ், வாகை சந்திரசேகர், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் மில்டன் மற்றும் சுனில் ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ஏமாற்றம் அளிக்காமல் பயணித்திருக்கிறது.

படத்தின் தன்மைக்கு ஏற்றபடி காட்சிகளை கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

பொழுதுபோக்கு அம்சங்களும், கார்த்திக்கான மாஸ் காட்சிகளோடு திரைக்கதை பயணித்தாலும், படத்தின் ஆரம்பம் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதன்பின் வரும் காட்சிகள் அனைத்தும் போர் அடிப்பது உண்மை. அதேசமயம் கமர்ஷியல் சினிமாவின், உண்மை நிலையை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.

இதில் டச்சிங்கான விஷயம் என்னவென்றால் யாரை பற்றியும், எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் கொள்ளையனான ‘ஜப்பான்’ யார்? என்ற பிளாஷ் பேக்கை குட்டி கதை மூலம் இயக்குநர் ராஜு முருகன் சொல்லி ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார்.

திருடர்கள் உருவாவதில்லை, சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள் என்ற மையக்கருவை வைத்துக்கொண்டு கமர்ஷியலான திரைக்கதையில் தனது வழக்கமான அரசியல் பேசியிருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.