பத்து வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றதோடு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்த படம் ஜிகர்தண்டா.. இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அதன் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுளக்ஸ் வெளியாகி இருக்கிறது.. முதல் பாகத்தை போல இதுவும் மிரட்டுகிறதா..? பார்க்கலாம்.
ஜிகர்தண்டாவை போன்றே ஜிகர்தண்டா டபுள்க எக்ஸ் படத்திலும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி கதை நகர்கிறது. ஒருவர் இயக்குநர், மற்றொருவர் மோசமான கேங்ஸ்டர். 1970களில் நடப்பது போன்று காட்டியிருக்கிறார்கள். மதுரையை சேர்ந்த ரவுடி ராகவா லாரன்ஸை நாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.. ஆனால் போகப்போக அவரையே கொலை செய்ய முயற்சிக்கிறார். அது ஏன்? என்பதற்கான விடையாக பல கதைகளை சொல்லியிருப்பது தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.
இரக்கமற்ற ரவுடியாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் கெட்டவனாக இருந்தாலும், போக போக நல்லவனாகி மக்கள் நாயகனாக உருவெடுக்கிறார். வழக்கமான தனது நடனத்தை தவிர்த்துவிட்டு கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான நடிப்பையும், ஆட்டத்தையும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
ராகவா லாரன்ஸை கொலை செய்ய நினைக்கும் எஸ்.ஜே.சூர்யா, அவரை நெருங்குவதற்காக இயக்குநராக நடித்தாலும், போகப்போக ஒரு திரைப்படம் எவ்வளவு பெரிய சக்தி மிக்கது என்பதை புரிந்துக்கொண்டு பயணிப்பவர் அதற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.
லாரன்ஸின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், பழங்குடிப் பெண் வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவருக்கான காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நவீன்சந்திரா, அமைச்சராக நடித்திருக்கும் இளவரசு, சத்யன், ஆகியோரின் கதாபாத்திரமும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதை சொல்லும் விதத்தில் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணின் இசையில், “மாமதுரை அன்னக்கொடி” பாடல் ஆட்டம் போட வைப்பதோடு, முனுமுனுக்கவும் வைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை தனி அடையாளத்துடன் படத்திற்கு பெரும் பலமாக பயணித்திருக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதையில் அக்காலத்தை தனது கலை இயக்கம் மூலம் மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் சந்தானம். அவருடைய உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.
ஜிகர்தண்டா முதல் பாகத்தில் எப்படி ஒரு ரவுடி மற்றும் திரைப்பட இயக்குநர் இடையிலான ஒரு பயணம் இருந்ததோ அதுபோல் இந்த இரண்டாம் பாகத்திலும் ரவுடி, இயக்குநர் என்ற பயணம் இருந்தாலும், அந்த பயணத்தை பல கிளைக்கதைகள் மூலம் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இருவருக்கும் இடையிலான ஒரு பிரச்சனையில் சமூக பிரச்சனையை பேசியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அதை தனது மேக்கிங் திறமையால் ரசிகர்கள் கொண்டாடும்படியான படமாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக இடைவேளை காட்சி அற்புதம். அந்த காட்சியில் கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டைலில் நம்மை கவர்ந்துவிட்டார்
படம் கமர்ஷியலாக இருந்தாலும் அதில் நல்ல கருத்தை சொல்லி, அதை வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும் இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரசிகர்களை கொண்டாட வைக்கும்.