லியோ ;விமர்சனம்

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த பனி படர்ந்த தியோக் கிராமத்தில் பார்த்திபன் (விஜய்), தன் மனைவி சத்யா (த்ரிஷா), தன் மகன் சித்தார்த் மற்றும் மகள் மதியுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். விலங்குகளை மீட்பவராகவும், விலங்கு நல ஆர்வலராக பார்த்திபன் வன பாதுகாவலரும் உயர் அதிகாரியுமான கௌதம் வாசுதேவ மேனனுக்கு உதவியாக இருக்கிறார்.

அங்கேயே பார்;த்திபன் ஒரு கஃபே ஷாப் நடத்திவரும் போது ஒருமுறை கழுதைப்புலி ஊருக்குள் வந்து விட அதை திறமையாக பிடிப்பதால் ஊர் மக்களிடம் நல்ல பெயரும் நன்மதிப்பையும் பெறுகிறார். இந்த சமயத்தில் திடீர் விபத்துகளை ஏற்படுத்தி பணம் பறிக்கும் ஐந்து பேர் கொண்ட மிஷ்கின்-சாண்டி கும்பல் ஒரு நாள் இரவு, பார்த்திபனின் கஃபே ஷாப்பிற்கு வந்து அட்டகாசம் செய்ய, பெண் ஊழியர் மற்றும் தன் மகளை காப்பாற்ற தற்காப்புக்காக ஐந்து பேரைச் சுட்டுக் கொல்கிறார்.
இந்த கொலைகள் தொடர்பான போலீஸ் விசாரணை இந்திய முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மீடியாக்களில் பேசும் பொருளாக வந்து, இறுதியில் பார்த்திபன் நிரபராதி என்று தீர்வு வழக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார். இவரின் புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக மாநிலவாரியாகப் பல கேங்ஸ்டர்கள் பார்த்து அவரை ‘லியோ’ என்று அடையாளப்படுத்தி பின்தொடர ஆரம்பிக்கிறார்கள்.

எதற்காக இந்த கேங்ஸ்டர்கள் பார்த்திபனை பின் தொடர்கிறார்கள் என்பது ஃபிளாஷ்பேக் காட்சிகளாக படத்தில் விரிகிறது. பார்த்திபனை லியோ என்ற ஒப்புக் கொள்ள வைத்தார்களா? லியோதான் பார்த்திபனா? பார்த்திபன் தான் லியோவா? அல்லது இருவரும் வௌ;வேறு நபர்களா? என்பதை பதட்டத்துடன் வைத்து முடித்திருக்கும் க்ளைமேக்ஸ்.

விஜய் இந்த படத்தில் தான் என்ட்ரி சாங், ஒன் லைன் பஞ்ச் இல்லாமல் தெளிந்த நீரோடைப் போல் அமைதியாக ஆனால் உணர்ச்சிகளில் ஆக்ரோஷத்தை காட்டி நடித்துள்ளதற்கு பாராட்டுக்கள்.இதில் விஜய்; பார்த்திபனாக அமைதியான நடுத்தர குடும்பத்தின் தலைவன், விலங்கு நல ஆர்வலர், என கேரக்டராக வாழ்ந்து இருக்கிறார். படம் முழுவதும் இந்த கெட்டப் சரியாக வராது என்பதால் ஃபிளாஷ்பேக் காட்சியில் இளமையான துள்ளல் விஜய்யாக தந்தைக்காக அதிரடியாக வேலை செய்யும் திறமைசாலியாக, பின்னர் தந்தையின் சூழ்ச்சியை அறிந்து கலங்கி, தன் தங்கையை காக்கும் போராட்டத்தில் இன்னுயிர் நீக்கும் லியோவை உண்மையில் வேறுபடுத்துவது விஜய்யின் விதிவிலக்கான நடிப்பு.

விஜய் அற்புதமான நேர்த்தியான சித்தரிப்பை வழங்கி கதாபாத்திரத்தின் நுணுக்கங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு, குறிப்பிட்ட தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆர்ப்பாட்டமில்லாமல், பஞ்ச் வசனம் பேசாமல் தெறிக்க விடுகிறார்,

மனைவி சத்யாவாக த்ரிஷா படம் முழுவதும் வருகிறார், அவருக்கான முக்கியத்துவம் மட்டுமே படத்தில் இருக்கிறது, அவருக்கான காட்சியமைப்புகள் அழுத்தமாக இல்லை, சராசரி மனைவியாக வந்து போகிறார்.

வில்லன் சகோதரர்களாக ஆண்டனி தாஸாக சஞ்சய் தத் அவரது தம்பி ஹரால்ட் தாஸாக அர்ஜுன் நடத்தும் போதை சாம்ராஜ்ஜியத்தை காக்க குடும்பத்தை கூட பலி கொடுக்க நினைக்கும் சுயநலமான வஞ்சகர்களாக வந்து போகின்றனர். சஞ்சய் தத் விஜய்யை பழி வாங்க செல்லும் போது கார் சேசிங்கில் இறப்பதும், அர்ஜுன் புகையிலை தொழிற்சாலையில் விஜய்யுடன் மோதி இறப்பது என்று அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கு உத்தரவாதம் கொடுத்து வலிமையான வில்லன்களாக தடம் பதித்துள்ளனர்.

விஜய்க்கு உற்ற துணையாக உதவி செய்யும் சகோதரராக வழி நடத்தும் கௌதம் வாசுதேவ் மேனன், அட்வைஸ் மட்டுமே கொடுத்து இரண்டு காட்சிகளில் வந்து போகும் பிரியா ஆனந்த், முதல் காட்சியில் கொடூர வில்லனாக மடிந்து போகும் மிஷ்கின், விஜய்யின் ஃபிளாஷ்பேக்கை எந்த ஒரு மேனரிசம் காட்டாமல் சொல்லியிருக்கும் மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், வில்லனாக சாண்டி, குழந்தை இயல், ரிடையராகும் வயதில் ஒரு குடும்பத்தை காக்கும் பொறுப்பை செவ்வன செய்யும் ஜார்ஜ் மரியன், தங்கையாக மடோனா செபாஸ்டியன், ஜாஃபர் சாதிக் ஆகியோர் படத்தின் அடுத்த கட்ட நகர்விற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

அனிருத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையும் படத்தின் வேகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன, சில பகுதிகளில் நன்றாக உள்ளது. அனிருத் இசையில் ‘நான் ரெடிதான் வரவா’, படாஸ் பாடல்கள் சிறப்பு. அனிருத் ரவிச்சந்தரின் அவரது வழக்கமான நட்சத்திர வழிபாட்டு இசையமைப்பிலிருந்து விலகி, விதிவிலக்கான பாடல்களுடன் லியோவை தனித்துவமான தொடுதலுடன் வித்தியாசமாக கொடுத்துள்ளார்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு பிரமாதம் அதற்கு சாட்சி ஃப்ளாஷ்பேக் காட்சியில் ஒரு ஆக்ஷன் பிளாக்.இமாச்சல பிரதேசத்தின் அழகு, பனிபடர்ந்தமலை, பள்ளி வளாகம், பிளாஷ்பேக் காட்சிகளில் அடர்ந்த செந்நிற லைட்டிங் படத்தை ஒரு டார்க் டோனிலேயே வைத்திருக்க உதவியுள்ளது மேலும் கேமரா இயக்கம் இங்கே சிறப்பாக இருக்கிறது.

சஞ்சய் தத்தின் போதைப் பொருள் கிடங்கு, விஜய்யின் வீடு, காஃபி ஷாப், ஆகியவற்றின் நேர்த்தியில் கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. முதல் ஒரு மணி நேரத்தில் பிலோமின் ராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் சரிசமமாக இருக்கிறது. கழுதைப்புலி (ஹைனா) காட்சியில் விஎஃப்எக்ஸ் நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள். இந்த காட்சிகள் தத்ரூபாக முதல் காட்சியிலும் சரி இறுதிக் காட்சியிலும் சரி புத்திசாலித்தனமாக கையாளப்பட்டுள்ளன. கார் சேஸ் சீக்வென்ஸ், முதலில் வரும் ஆக்ஷன் பிளாக் இறுதிக் காட்சியில் அரை மணி நேரம் வரும் சண்டைக் காட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு குறையில்லாமல் மிரட்டலாக இயக்கியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ படத்தின் முதல் பாதி கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தடைகளை திறமையாக வழிநடத்துகிறது. இரண்டாம் பாதியில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் நிகழ்வுகளுக்குத் திறம்பட களம் அமைத்து, அதை எதிர்கொள்ளும் அரணாக தோன்றுகிறது. இந்தக் கதையை நாம் பலமுறை பார்த்திருப்போம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது எப்படிச் சொல்லப்படுகிறது என்பதுதான் மிக முக்கியமானது, அதை வெற்றிகரமாக திறமையாக கையாண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

லியோவில் உள்ள தொழில்நுட்பக் குழுவின் விதிவிலக்கான பங்களிப்புகள் சராசரி கதைக்களத்திற்கு கணிசமாக ஈடுகொடுக்கின்றன. விஜய்யை புதிய கோணத்தில் பில்டப் இல்லாமல் காட்டிய விதத்திலும், அவருக்கான டெம்ளேட்களை உடைத்தெறிந்து சாதாரண வித்தியாசமான தோற்றத்தில் காட்சிப்படுத்தி ஒரு குடும்பத் தலைவனின் அக்கறை, பாசத்தை செண்டிமெண்ட் கலந்து ஆக்ஷனுடன் லாஜிக்கில்லா மேஜிக்; செய்வதில் கில்லாடி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வெல்டன்.

இறுதிக்காட்சி வரை லியோ உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வியிலேயே கொண்டு வந்து க்ளைமேக்சில் அதற்கான பதிலும் சாமர்த்தியமாக கொடுத்துள்ளார். லியோ என்ற பெயர் தான் படத்தின் டைட்டில் என்றாலும் அவரைப் பற்றி விரிவாக சொல்லாமல் பார்த்திபனின் வாழ்க்கையையும், குடும்ப சூழலையும் படம் முழுவதும் காட்டிய சாதுர்யம் தான் படத்தை திறம்பட அழைத்துச் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *