சமாரா ; விமர்சனம்


காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் மூலமாக ஊடுருவும் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் வித்தியாசமான பயோ கெமிக்கல் மூலமாக மிகப்பெரிய அழிவை இந்தியாவில் உண்டுபண்ண நினைக்கின்றனர், இந்த தகவல் சீக்ரெட் ஏஜென்ட் ஆன ரஹ்மானுக்கு தெரியவர இதன் பின்னணியில் உள்ள ஆட்களை ஒவ்வொருவராக களை எடுத்து வருகிறார்.

இன்னொரு பக்கம் ராணுவ அதிகாரியாக இருந்து ஒரு தீ விபத்தில் முகமும் உடலும் உருக்குலைந்த தோற்றத்துடன் காணப்படும் பினோஜ் வில்வியாவை வேண்டாம் என ஒதுக்கும் அவர் மனைவி, தங்களது மகளை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விடுகிறார். ஆனாலும் மகளோ தந்தை மீது பாசத்தில் இருப்பதால் அடிக்கடி சென்று மகளை பார்த்து வருகிறார்.

புதிதாக பல இடங்களுக்கு பயணம் செய்ய விரும்பும் மகள் தனியாக பனிப்பிரதேசம் ஒன்றில் பயணம் செய்யும்போது எதிர்பாராமல் தவறி விழுகிறார். அப்படி விழுந்து உருண்டு வரும்போது ஏற்கனவே ராணுவ வீரர்களால் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போன இரண்டு நபர்களின் ஒருவர் சடலத்தின் மீது மோதி விழுகிறார்.

மகளைத் தேடி வரும் அங்கே வரும் தந்தைக்கும் இறந்து போன அந்த நபர்களின் உடலை ஆய்வு செய்வதற்காக அங்கே வரும் ரஹ்மானுக்கும் அந்த இருவரும் பயோ கெமிக்கல் மூலம் இறந்திருக்கிறார்கள் என்பதும் அவர்கள் மூலமாக அது மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது என்கிற அதிர்ச்சியான உண்மை தெரிய வருகிறது.

குறிப்பாக சடலத்தின் மீது விழுந்ததால் அந்த இளம் பெண் பாதிக்கப்படுகிறார். இதனைத் தொடர்ந்து தன் மகளை காப்பாற்றுவதற்காக தங்கள் இருவரையும் தனிமைப்படுத்திக் கொண்டு விடுகிறார் வினோஜ் வில்வியா. இன்னும் உயிரோடு இருக்கும் ஒரு நபரை தேடி ரகுமான் புறப்படுகிறார்.. அந்த கிருமியின் தாக்கத்திலிருந்து மகளை தந்தை காப்பாற்றினாரா ? மீதம் இருந்த அந்த தீவிரவாதியை தேடி கண்டுபிடித்து ரஹ்மான் அளித்தாரா என்பது மீதிக்கதை.

முழுக்க முழுக்க பனி படர்ந்த காஷ்மீர் பகுதியிலேயே எடுக்கப்பட்ட படம் என்பதால் ஏதோ ஒரு பாலிவுட் அல்லது ஹாலிவுட் படத்தை பார்ப்பது போன்ற உணர்வே படம் முழுவதும் நமக்கு ஏற்படுகிறது. அதேசமயம் ஒரு வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு அதை எந்த அளவிற்கு போரடிக்காமல் கொண்டு செல்ல வேண்டுமா அதை கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குனர் சார்லஸ் ஜோசப்.

ஏற்கனவே பல படங்களில் இது போன்று போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் இந்த படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஜஸ்ட் லைக் தட் அசால்ட்டாக செய்துவிட்டு போகிறார் ரஹ்மான். ஒரு பக்கம் ஆக்ஷனில் இறங்கி அதிரடி காட்டுவதுடன் தீவிரவாதிகளின் பின்னணியை ஆராய்ந்து சில முக்கிய முடிச்சுகளை அவிழ்க்கும் போதும் ஆச்சரியப்படுத்துகிறார் ரஹ்மான்.

படம் முழுவதும் முகத்திற்கு ஒரு விதமான அவலட்சனமான மேக்கப்பை அணிந்து கொண்டு நடித்திருக்கும் டாக்டர் அலன் மோசஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோஜ் வில்வியா உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். பொதுவாக இது போன்ற தோற்றம் கொண்டவர்களை பார்க்கும்போது பலருக்கும் முகச்சுழிப்பு ஏற்படும். ஆனால் இவரது கதாபாத்திரத்தை பார்க்கும் போது நமக்கு பரிதாபம் ஏற்படுவதுடன் ஒரு மரியாதையும் ஏற்படுகிறது. அவருடன் படம் முழுக்க இயல்பாகவும் பயணிக்க முடிகிறது. மகளுக்காக அவர் எடுக்கும் முடிவும் இறுதியில் நாட்டுக்காக அவர் எடுக்கும் முடியும் நம்மை கண்கலங்க வைக்கின்றன.

அவரது மகளாக நடித்திருக்கும் சஞ்சனா திபு ஆரம்பத்தில் துறுதுறு இளம்பெண்ணாக பெண்ணாக வந்து நம் மனதை கொள்ளை கொள்பவர் இடைவேளைக்குப்பின் கிருமி தாக்கத்தால் அவதிப்படும்போது நம் மனதை பரிதவிக்க வைத்து விடுகிறார்.

இடைவேளைக்கு பின் வரும் நடிகர் பரத்தின் கதாபாத்திரம் எதற்காக இடையில் சேர்க்கப்பட்டுள்ளது என கேள்வியை எழுப்பினாலும் கிளைமாக்ஸை நோக்கி படம் நெருங்கும்போது அவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் அதற்குப் பின்னணியில் ஒளிந்துள்ள விஷயங்களும் தெரியவரும்போது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இவர்களை தாண்டி குறிப்பிட்டு சொல்லும் இன்னொரு கதாபாத்திரமாக ஹனி கதாபாத்திரத்தில் நடித்துள்ள விவியா சந்த்தும் நம் மனதை கொள்ளை கொள்கிறது. ரஹ்மானின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காஷ்மீர் பகுதி போலீஸ் அதிகாரியாக வரும் கோவிந்த் கிருஷ்ணா தான் ஒரு பொருத்தமான தேர்வு என நிரூபிக்கிறார்.

இந்த படத்தை இன்னொரு தூணாக தாங்கி நிற்பது சீனு சித்தார்த்தின் ஒளிப்பதிவு மற்றும் கோபி சுந்தரின் பின்னணி இசை இரண்டும் தான். ரசிகர்களுக்கு போரடிக்காத ஒரு கதையை கொடுக்க வேண்டும்,, எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி கமர்சியலுக்காக குத்துப்பாட்டு டான்ஸ் எனப் போகாமல் கதையுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என முனைப்பு காட்டி இருக்கும் இயக்குனர் சார்லஸ் ஜோசப் நிச்சயமாக படம் பார்க்கும் ரசிகர்களை திருப்திப்படுத்தி அனுப்புகிறார்.