மேதகு 2 ; விமர்சனம்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான மேதகு படத்தின் தொடர்ச்சியாக இந்த மேதகு 2 படம் வெளியாகி உள்ளது..

சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது.

அதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது.

இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 20 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது

குறிப்பாக இடைவேளைக்கு பின் காட்சிகள் விறுவிறு வேகத்தில் நகர்கின்றன அதிலும் பிரபாகரன் மற்றும் அவரது குழுவை சேர்ந்த நால்வரை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வலுக்கட்டாயமாக கையெழுத்து போட சொல்வதும் ஆனால் அவர்கள் அங்கிருந்து சாமார்த்தியமாக தப்பிப்பதுமாக, அந்த சமயத்தில் இருந்த மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தையும் அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர்.

பிரபாகரனாக நடித்துள்ள கௌரி சங்கர் பல காட்சிகளில் நிஜமான தலைவர் பிரபாகரன் இளமை காலத்தில் இப்படித்தான் இருந்திருப்பார் என நினைக்க வைக்கும் விதமாக, அவரின் கம்பீரத்தை தனக்குள் கொண்டுவரும் விதமாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவரது கூட்டாளிகள் ஆக உடன் நடித்த நடிகர்களும் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து உடல்மொழி, வசனம் என அனைத்திலும் பளிச்சென தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

மறைக்கப்பட்ட, அல்லது திரிக்கப்பட்ட ஈழ தமிழர் போராட்ட வாழ்வியலை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு சரியான விதத்தில் கடத்தும் ஒரு ஊடகமாக நடிகர் நாசர் தனது பங்களிப்பை செவ்வனே செய்துள்ளார். குறிப்பாக மாணவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலமாக தமிழர் போராட்ட வரலாற்றை வெளிப்படுத்திய விதமும் கூட புது யுக்தி என்றே சொல்லலாம்.

இந்த படத்தை இயக்கியுள்ள ரா கோ யோகேந்திரன் வரலாற்று ஆய்வுகளை திரட்டி இந்த படத்தை போரடிக்காத வகையில் நகர்த்தி சென்றுள்ளார். அதேசமயம் சிங்களவர்களின் அராஜகத்தை காட்டும் விதமாக் கர்ப்பிணி வயிற்றில் இருந்து சிசுவை அறுத்து எடுப்பது போன்ற பெண்களை அச்சுறுத்தும் காட்சிகளை காட்டுவதை தவிர்த்திருக்க வேண்டும்..

தமிழீழ விடுதலைக்காக எம்ஜிஆர் எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி செய்துள்ளார் என்பதை பார்க்கும்போது 2009-ல் இன்னொரு தலைவரால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமும் நமக்கு நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை..

மூன்றாம் பாகத்திற்காக காத்திருப்போம்..