நாடு ; விமர்சனம்


ஒரு மலைகிராமம், எளியமக்கள், அவர்களுடைய மிக அடிப்படைத் தேவையான மருத்துவ வசதி ஆகியன பொதுப்பார்வையில் மிகச் சின்ன விசயம், சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு பெரிய வலி என்பதையும் இந்தச் சின்ன விசயத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய பெரிய அரசியலையும் அழகாக வெளிப்படுத்தும் படம் நாடு.

பிக் பாஸ் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி நடித்து M. சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாடு. ’எங்கேயும், எப்போதும்’, ’இவன் வேற மாதிரி’ படங்களில் விறுவிறுப்பன காட்சி நகர்வில் கதை சொன்ன M.சரவணன் இப்படத்தில் மனித உணர்ச்சிகளின் வழியே சிறிது நாடக பாணியில் படம் தந்துள்ளார். இருப்பினும் குக்கிராமத்தில் மருத்துவ வசதியின் தேவையை புரிய வைத்து விட்டார். நீட் அரசியல், மாறி வரும் உணவு பழக்கம் போன்ற விஷயங்களை தொட்டு விட்டு செல்கிறது நாடு.

கொல்லிமலையில் உள்ள ஒரு சிறிய மலைக்கிராமம் தேவநாடு. அந்த கிராமத்தில் மருத்துவமனை இருந்தும், டாக்டர்கள் இல்லாததால், அவசரகாலத்தில் நெடும் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்குள் பல உயிர்கள் பலியாகின்றன. கிராம மக்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கலெக்டரிடம் மனு கொடுத்து போராடி மருத்துவமனைக்கு ஒரு மருத்துவரை நியமிக்க வைக்கின்றனர். டாக்டர் அந்த கிராமத்தை விட்டு போகாமல் இருக்க வைப்பது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருக்கிறது என்று கலெக்டர் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

தேவநாடு கிராமத்தின் மருத்துவமனைக்கு மருத்துவராக மஹிமா நம்பியார் வருகிறார். ஊர் தலைவர் சிங்கம் புலி, தர்ஷன் மற்றும் தர்ஷனின் தந்தை ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் டாக்டர் மகிமாவுக்கு உதவியாக இருக்கிறார்கள். இருந்தாலும் டாக்டர் மஹிமா கிராமத்தில் பணி செய்வதை விரும்பாமல் ஒரு வாரத்திற்குள் இடமாற்றம் செய்ய முற்படுகிறார்.

அதற்குள் மஹிமா கிராமத்தில் தங்கியிருக்கும் போது சில உயிர்களைக் காப்பாற்றுகிறார், அதைத் தொடர்ந்து கிராம மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பார்க்கிறார்கள். மஹிமாவை இடமாற்றம் செய்வதைத் தடுக்க கிராம மக்கள் திட்டம் தீட்டுகிறார்கள். என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிக்பாஸ் புகழ் தர்சன், மலை கிராம இளைஞர் வேடத்துக்கு மிகப் பொருத்தமாகத் தன்னை மாற்றிக்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துவிடுகிறார்.அப்பாவித்தனம் கலந்த அவருடைய செயல்கள் கலகலப்பூட்டவும் செய்கின்றன.கலங்கவும் வைத்துவிடுகிறது.

மருத்துவராக நடித்திருக்கும் மகிமாநம்பியார் காக்கைக்கூட்டத்தின் நடுவே ஒரு வெண்புறா போலிருக்கிறார்.நடிப்பிலும் வெல்கிறார்.அவரைப் பற்றிய கிராமமக்களின் பார்வைக்கும் அவருடைய சொந்த வாழ்நிலைக்குமான முரண்களுக்கு நடுவே அவர் தவிக்கும் காட்சிகளில் நல்ல நடிப்பு.

கார்பரேட் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அரசியல் காமெடியாக சொல்லும் சிங்கம் புலியின் நகைச்சுவை தமிழ் நாட்டின் தமிழக அரசியல் தலைவர்களை பற்றி யோசிக்க வைக்கிறது.

மறைந்த நடிகர் சிவாஜி நடிப்பை பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாள் நீங்க இருந்திருக்கலாமே சார் என்று சொல்ல வைக்கிறது.சக்திவேலின் ஒளிப்பதிவில் சத்தியாவின் இசை ஒரு தாலாட்டு போல் இருக்கிறது.

எளிய கிராமத்தில் மருத்துவரை வரவழைக்கவும், அவரை இருக்கச் செய்வதற்கும் ஒரு கிராமத்து இளைஞன் எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறான் என்பதை யதார்த்தமாக சொல்லி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எம் சரவணன்.ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்ட விதத்தில்தான் படத்தின் வெற்றி இருக்கிறது. இந்தியாவின் ஆன்மா கிராமம் என்பார்கள். இந்த கிராமம் இயங்க நல்ல மருத்துவமனைகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது இப்படம். புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு முதல் பெண் மருத்துவர் முத்து லட்சுமியின் பெயரை சூட்டும் போது நம்மை அறியாமல் கை தட்டுகிறோம்.