அன்னபூரணி ; விமர்சனம்


லேடி சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்தில் இருக்கும் நயன்தாராவின் 75வது படமாக வெளியாகி இருக்கிறது அன்னபூரணி. படத்தின் டைட்டிலிலேயே தெரிகிறது இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பது. இந்த 75வது படத்தில் சதம் அடித்திருக்கிறாரா நயன்தாரா ? பார்க்கலாம்.

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் ராஜா ராணி படத்தில் நடித்த சத்யராஜ், ஜெய் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் சமையல் சேவை செய்யும் ஆச்சரியமான குடும்பத்தில் பிறந்தவர் தான் அன்னபூரணி ( நயன்தாரா). மீன் வாசம் கூட பிடிக்க விடாமல் பல கட்டுப்பாடுகளுடன் அப்பா மகளாக வளரும் இவர் உலகமே பாராட்டும் செஃப்பாக வேண்டும் என ஆசைப்படுகிறார்.

ஆனால் குடும்ப கட்டுப்பாடுகளை தாண்டி ஒரு கட்டத்தில் தனது லட்சியமாக முக்கியம் என வீட்டை விட்டு வெளியே வந்து தன்னுடைய இன்ஸ்பிரேசனான செஃப் சத்தியராஜை சந்திக்கிறார். அவரும் அன்னபூரணிக்கு உதவ முடிவெடுக்கிறார்.

ஆனாலும் நயன்தாராவை சுற்றி இருக்கும் கட்டுபாடுகள் என்ன? அவரது கனவு நனவானதா என்பது மீதிக்கதை.

ஒரு பிராமண பெண் தன் கனவுக்காக மாமிசத்தை தொட்டால் என்ன பிரச்சினை வரும் என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது. அதனை நடிகை நயன்தாரா சிறப்பாக நடித்துக்காட்டியுள்ளார். சொல்லப்போனால் ஒன் மேன் ஆர்மியாக படத்தின் கதையை தனது தோள் மீது சுமக்கிறார் நயன்தாரா.

அன்னபூரணிக்கு அறிவுரை வழங்கி ஊக்குவிப்பதை தவிர ஜெய்க்கு வேறு எந்த வேலையும் கொடுக்கவில்லை இயக்குநர். ஆனாலும் நயன் கூடவே இருந்தாலும் தன் காதலை சொல்ல தடுமாறுவது, தூரமாக இருந்து அவரை ரசிப்பது என ஜெய், நயன் ஜோடி ராஜா ராணி கெமிஸ்ட்‌ரியை கண் முன் கொண்டு வருகிறது..

நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார். தனது ஆச்சாரத்திற்கு களங்கும் ஏற்படுத்திய மகளால் ஒவ்வொரு முறையும் தலைகுணியும் போதும் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல், தனது வருத்தத்தையும், கோபத்தையும் தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக நடித்திருக்கும் சத்யராஜின் கதாபாத்திரம் மற்றும் அவரது அனுபவமான நடிப்பு படத்திற்கு பலமாக பயணித்திருந்தாலும், தனது பழைய ”தகடு தகடு” பாணியில் இன்னும் எத்தனை நாளைக்கு தாநோறேமாதிரி வசனம் பேசுவாரோ..?

கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கும் கார்த்தி குமார், வில்லத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதோடு, வில்லாதி வில்லன் சத்யராஜையே வில்லத்தனத்தில் மிரட்டவும் செய்திருக்கிறார்.

ஜெயிச்சாலும் தோத்தாலும் நான் அப்பவே சொன்னேன் இல்ல அப்படினு சொல்ல ஆளுங்க இருப்பாங்க”, “எந்தக் கடவுளும் கறி சாப்பிடக்கூடாதுனு சொல்லல”, “பிரியாணிக்கு ஏது மதம், அது ஒரு எமோஷன் ” போன்ற டயலாக்குகள் அப்ளாஸ் அள்ளுகின்றன.

சத்யன் சூரின் ஒளிப்பதிவு களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நயன்தாராவின் வயது முதிர்வை மறைக்க அதிகம் மெனக்கெட்டிருப்பது பல இடங்களில் தெரிந்தாலும், அவர் மிக நேர்த்தியாக சமாளித்திருக்கிறார். தமனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா பார்த்து சளித்த கதையை கையில் எடுத்தாலும் அதை வித்தியாசமாக கொண்டு போய் ரசிக்க வைத்துள்ளார். அதேசமயம் பல விஷயங்களை பேச நினைக்காமல் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தில் ஆரம்பத்திலேயெ முடிவு என்னவாக இருக்கும் என்று தெரிந்துவிடுவதால், எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் நகரும் கதையில் படத்தின் நீளமும் ஒரு மைனஸாகிவிட்டது. மொத்தத்தில் அன்னபூரணியிடம் அறுசுவை விருந்தை எதிர்பார்த்து போனால் மினி மீல்ஸ் பரிமாறி அனுப்பி வைக்கிறார்.