ஷூட் தி குருவி ; விமர்சனம்

ஷா ரா, விஜே ஆஷிக், அர்ஜை மற்றும் சிலர் நடிப்பில் உருவாகி SHORTFLIX ஓடிடி தலத்தில் வெளியாகியுள்ள படம் “Shoot The Kuruvi”. இந்த குறும்படத்தை மதிவாணன் இயக்கியுள்ளார்.

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் பிரபல ரவுடியும் கொலையாளியுமான குருவி ராஜன் பற்றி ஆராய்ச்சி செற்கிறார்கள். அவர்களுக்கு போதுமான தகவல் கிடைக்காததால் ஏற்கனவே குருவி ராஜன் பற்றி புத்தகம் எழுதிய பிரபல பேராசிரியரிடம் அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். முதலில் மறுக்கும் பேராசிரியர் மாணவர்கள் ஒரு கிழிக்கப்பட்ட புகைப்பட துண்டுகளை பார்த்து அதிர்ச்சியடைந்து குருவி ராஜன் கதையை சொல்கிறார்.

சிறுவயதில் இருந்து தனது திறமையாலும், பலத்தாலும் பெரும் கேங்க்ஸ்டராக உருவெடுத்து காவல்துறையால் கூட நெருங்க முடியாத ஒரு பயங்கர கொலைக்காரன் குருவி ராஜன். இன்னொருபுறம், தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கிறார் ஷெரிப். அவரது கனவில் தோன்றும் துறவி, எப்படியும் சாகத்தான் போகிறாய். 5 டார்கெட்டை வைத்து அதை முடித்து விடு என்கிறார். அந்த டார்கெட் நடக்கும் போது, எதிர்பாராதவிதமாக குருவி ராஜன் ஒரு கேங்க்ஸ்டர் என்று அறியாமலேயே ஷெரிப் தாக்கி விடுகிறார். அதன்பிறகு, இவர்கள் வாழ்வில் என்ன நடந்தது? துறவி சொன்ன அந்த 5 டார்கெட்டுகள் என்ன? அதை ஷெரிப் செய்து முடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அர்ஜை, குருவி ராஜன் என்னும் மிரட்டலான காபாத்திரத்திலும், ஆஷிக், ஷெரிப் கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஷிக், மற்றும் கோவிந்த் கதாபாத்திரத்தில் ஷா ரா இருவரும் நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார்கள். பேராசிரியராக வரும் ராஜ்குமார் ஜி, துறவியாக சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்சி நவீன் என அனைத்து நடிகர்களும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போதுள்ள காலகட்டத்தில் ஷார்ட் பிலிமாக எடுக்கவேண்டிய கதைகள் பலவற்றை காட்டாயத்தினால் 2 மணி நேர படமாக அமைத்து தட்டுத்தடுமாறி வருகின்றனர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சில இயக்குனர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷார்ட்பிலிமை நேர்த்தியாக அமைத்து ஓடிடியில் வெளியிட்டு இயக்குனர்களை தூக்கிவிடும் “SHORTFLIX”-ன் முயற்சி பாராட்டத்தக்கது.

பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலனின் ஆரம்பக்கால வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, ஒரு கேங்ஸ்டர் படமாகவும், அதே சமயம் பிளாக் காமெடி ஜானர் திரைக்கதையோடு வந்துள்ளது ஷூட் த குருவி என்னும் குறும்படம்.. ஒருமணி நேரத்துக்கும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் இப்படம் SHORTFLIX தளத்தில் காணலாம்.