டி 3 ; விமர்சனம்

பிரஜின், வித்யா பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் த்ரில்லர் கதையாக வெளியாகியுள்ள படம் டி 3.

காவல்துறை ஆய்வாளராக இருக்கும் நாயகன் பிரஜின், தனது மனைவி வித்யா பிரதீப்புடன் குற்றாலத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, லாரியில் அடிபட்டு இறந்த பெண்ணின் வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கிறார் பிரஜின்.

மீண்டும் ஒரு விபத்து நடக்க, இரு விபத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமையை கண்டுபிடிக்கிறார் பிரஜின். குற்றவாளி யார் என நெருங்குவதற்கு முன், பிரஜினின் மனைவியாக வரும் வித்யா பிரதீப்பையும் குற்றவாளிகள் கொலை செய்து விடுகின்றனர்.

இறுதியில் இந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக செய்கிறார்கள்? விபத்துகள் ஏற்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்து இருக்கும் பிரஜின், இப்படத்திற்காக அதிகமான உழைப்பை கொடுத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் வித்யா பிரதீப்பிற்கு சொல்லும்படியாக பெரிதான காட்சிகள் எதுவும் இல்லை.

ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அந்தக்குறை தெரியாமல் அடுத்தடுத்த காட்சிகள் அமைந்திருக்கின்றன. இயக்குனர் பாலஜி கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் படத்தில் பெரிதாக சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. கிளைமாக்சில் வரும் டிவிஸ்ட் சிறப்பு.

ஸ்ரீஜித்தின் இசையும், மணிகண்டனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் டி 3 பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *