பருந்தாகுது ஊர்க்குருவி ; விமர்சனம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் நிஷாந்த் ரூசோ சின்ன சின்னதாக திருட்டுக்களை செய்து அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லப்பிள்ளையாக இருப்பவர். இந்த நேரத்தில் வெளியூரில் இருந்து வந்த விவேக் பிரசன்னாவை இருவர் கொலை செய்து விட்டதாக கூறி போலீசில் சரண்டர் ஆகின்றனர் அவரது உடலை கைப்பற்றுவதற்காக கிளம்பும் சப் இன்ஸ்பெக்டர் கோடங்கி வடிவேல், அப்போது ஸ்டேஷனுக்கு வந்த நிஷாந்தையும் அழைத்துக்கொண்டு தனக்கு வழிகாட்ட சொல்லி அழைத்துக்கொண்டு செல்கிறார்.

எஸ்ஐ மீது உள்ள கோபத்தில் மாற்றி மாற்றி வழி காட்ட ஒரு கட்டத்தில் விவேக் பிரசன்னா விழுந்து கிடக்கும் இடத்தை கண்டுபிடித்ததும் தன்னை அலைக்கழித்த கோபத்தில் ரூசோவின் கையில் விலங்கை மாட்டி அதை விவேக் பிரசன்னாவின் கையுடன் இணைத்து விடுகிறார் எஸ்.ஐ. டவர் கிடைக்காததால் செல்போனில் பேசுவதற்காக எஸ். ஐ மெயின் ரோட்டுக்கு வர அந்த சமயத்தில் விவேக் பிரசன்னாவுக்கு உயிர் இருப்பது நிஷாந்த்க்கு தெரிய வருகிறது.

அப்போது விவேக் பிரசன்னாவின் மனைவியிடம் இருந்து வரும் செல்போன் அழைப்பில் தனது கணவனை காப்பாற்றினால் நிறைய பணம் தருவதாக கூறுகிறார். பணம் என்றதுமே விவேக் பிரசன்னாவை காப்பாற்றுவதற்காக தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஓடுகிறார் நிஷாந்த்.

ஒரு பக்கம் போலீஸ் தேட, இன்னொரு பக்கம் மீண்டும் விவேக் பிரசன்னாவை கொல்வதற்காக கொலையாளிகள் துரத்துகின்றனர். விவேக் பிரசன்னா யார் ? எதற்காக அவரை கொல்ல துரத்துகின்றனர் ? நிஷாந்த் ரூசோவால் அவரை காப்பாற்ற முடிந்ததா என்பது மீதி கதை

பெரும்பாலான படம் முழுவதும் காட்டிற்குள்யே நகர்கிறது நிஷாந்த் ரூசோவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமானது தான்.. ஆனால் பாவம் மனிதர் படம் முழுக்க ஓடுவது மட்டுமல்லாமல் விவேக் பிரசன்னாவையும் தூக்கி சுமந்து கொண்டும் செல்லும் காட்சிகள் அவர் மீது பரிதாபத்தை வரவழைக்கின்றன.

அதேபோல விவேக் பிரசன்னா என்றாலே காமெடியில் களைகட்ட வைப்பார் என எதிர்பார்த்தால் இந்த படம் முழுவதும் பெரும்பாலும் காயம் பட்டு மயங்கிய நிலையிலேயே அவரது காட்சிகள் கடந்து போய் விடுகின்றன. கதாநாயகி என காயத்ரி ஐயரை சொல்லலாம் என்றால் அவர் கதாபாத்திரம் கொடுக்கும் டிவிஸ்ட் நம்மை அதிர வைக்கிறது.

படத்தில் முக்கியத்துவமான இன்னும் இரண்டு கதாபாத்திரங்கள் என்றால் அது இன்ஸ்பெக்டராக வரும் வினோத் சாகர் மற்றும் எஸ்ஐ ஆக நடித்துள்ள கோடாங்கி வடிவேல் இருவரும் தான். இருவரும் படத்தின் ஹீரோவை விட அதிக அளவில் வசனம் பேசுகின்றனர். இருந்தாலும் கதைக்கு பக்கபலமாக அவர்கள் இருவரது கேரக்டர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

ரஞ்சித் உன்னியின் பின்னணி இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டுகிறது. இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் என்ன புதுமையான விஷயம் என்றால் வழக்கமாக காதலனும் காதலியும் தான் வில்லன்களுக்கு பயந்து ஓடுவார்கள். இந்த படத்தின் கதாநாயகன் காதலிக்கு பதிலாக முன்னே பின்னே தெரியாத ஒரு நபரை தூக்கிக் கொண்டு ஓடுவது புதுசாக இருக்கிறது.

பல இடங்களில் விறுவிறுப்பு, சில இடங்களில் திருப்பம் என திரைக்கதையில் சில நேரங்களில் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் ஏதோ ஒன்று குறைவது போன்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் கிரிப்பான காட்சிகளை சேர்த்து இருந்தால் விறுவிறுப்பான த்ரில்லர் படங்களின் பட்டியலில் இந்த படம் இடம் பிடித்திருக்கும்