வா வரலாம் வா ; விமர்சனம்


பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் பாலாஜி முருகதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் வா வரலாம் வா. பிக்பாஸில் ரன்னராக வெற்றிபெற்ற பாலா இந்தப்படத்தில் ஒரு கதாநாயகனாக வின்னர் ஆகி இருக்கிறாரா ? பார்க்கலாம்.

சிறு வயதில் செய்த குற்றத்திற்காக சிறையில் பல வருடங்களை கழித்துவிட்டு விடுதலையாகும் நாயகன் பாலாஜி முருகதாஸ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி, உழைத்து வாழ நினைத்து வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்காததால், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட முடிவு செய்பவர்கள், பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மைம் கோபியிடம் வேலைக்கு சேருகிறார்கள்.

ஒரு வால்வோ பஸ்ஸை திருட சொல்லி அதை விற்று பணம் பார்க்கலாம் என்று மைம்கோபி பாலாஜியையும், ரெடின் கிங்ஸ்லியையும் அனுப்புகிறார். இருவரும் ஒரு பஸ்ஸை கடத்த முயல அந்த பஸ்ஸில் 40 குழந்தைகள், சிங்கம் புலி, ஆயா தீபா, மஹானா மற்றும் காயத்ரி என்று அனைவரையும் சேர்த்து கடத்தி பணம் பறிக்க தனியாக திட்டம் போடுகின்றனர்.

அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்கள் அதனால், அவர்களுடைய திட்டம் தோல்வியடைகிறது. இதனால், மஹானா மற்றும் காயத்ரி இருவரையும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் பணக்கார வீட்டுப் பெண்கள் என்பதால் அவர்களைக் கடத்திப் பணம் பறிக்க மைம் கோபி திட்டம் போடுகிறார்.மைம் கோபியின் திட்டம் வெற்றி பெற்றதா? பாலாஜி மற்றும் கிங்ஸ்லி காதல் வெற்றி பெற்றதா? என்பது மீதிக்கதை.

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் கமர்ஷியல் ஹீரோவாக காதல், நடனம், ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் கலந்து முதல் படத்திலேயே அத்தனையும் சிறப்பாக செய்துள்ளார். அவரது நடிப்பு பெரிய திரையில் பார்க்க நன்றாக இருக்கிறது.

நாயகிகளாக மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, கதையோடு பயணித்து கவனம் பெறுகிறார்கள். நாயகனுடன் படம் முழுவதும் வருகிறார் ரெடின்கிங்ஸ்லி.சிரிப்புக்காக அவரை வைத்திருக்கிறார்கள். தீபா, சிங்கம் புலியும் ரெடின் கிங்ஸ்லியுடன் சேர்ந்து அவ்வப்போது நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பலவிதமான கெட்டப்பில் பெரிய பில்டப்பை ஏற்படுத்தும் வில்லன் தோட்டா ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் ‘மைம்’ கோபி ஆச்சர்யப்படுத்துகிறார். காயத்ரி ரெமா, சரவண சுப்பையா, கிரேன் மனோகர், வையாபுரி, மைம்கோபி ஆகியோர் படம் வேகமாக நகர உதவியிருக்கிறார்கள்.

தேவாவின் இசையில் அனைத்துவகைப் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.பின்னணி இசையும் நன்று. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காட்சிகள் வண்ணமயமாக அமைந்திருக்கின்றன.பாடல்காட்சிகள் பெரிதாகப் பேசப்படும்.

படத்தின் கதைக்களம் நன்றாக உள்ளது, வசனமும் திரைக்கதையும்; வழக்கமான கதைக்கு ஒரு தனித்துவமான திருப்பத்தை சேர்க்கிறது. சிம்பிளான கதை களத்தை ஆக்ஷன், காதல், குத்தாட்டம், நகைச்சுவை என கமர்ஷியல் பார்முலாவுடன் விறுவிறுப்பாக படைத்துள்ளனர் இரட்டை இயக்குனர்கள் எஸ் பி ஆர், எல்.ஜி.ரவிசந்தர். இன்னும் திட்டமிட்ட விவரிப்புடன் கதைக்களத்தை கொண்டு சென்றிருந்தால் அதிகம் பேசப்படும் படமாக மாறியிருக்கும். இருந்தாலும் பல கஷ்டங்களோடு திரையரங்குகளுக்கு வருபவர்கள் சிரித்து மகிழ்ந்து செல்லவேண்டும் என்று நினைத்துப் படம் எடுத்திருக்கிறார்கள். அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது.