வாழ்வு தொடங்குமிடம் நீ தானே ; விமர்சனம்


ஆணும், பெண்ணும் காதலிப்பதையே எதிர்க்கும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி பெண்ணும் பெண்ணும் காதல் கொண்டால் ? அதுவும் இரண்டு வெவ்வேறு மதங்களை சேர்ந்த பெண்கள் காதல் கொண்டால் ? என்ன நடக்கும் ? வாழ்வு தொடங்குமிடம் நீ தானே படம் சொல்ல வருவது இதைத்தான்.. லெஸ்பியன் உறவை மட்டுமே மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் இருந்து மார்டன் பெண்ணான வினோதா (ஸ்ருதி பெரியசாமி) சினிமா எடுக்கும் முயற்சியாக வேறொரு ஊரில் இருக்கும் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த ஷகிராவின் (நிரஞ்சனா நெய்தியார்) வீட்டிற்கு வந்து உதவி கேட்கிறார்.. ஷகிராவின் தந்தை அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து தனது வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறார்..

இந்த சூழலில் ஷகீரா, வினோதா இருவருக்கும் இடையே காதல் உணர்வு பூக்கின்றது. இந்த காதலை ஷகிராவின் அப்பாவிடம் வினோதா கூற பிரச்சனை வெடிக்கிறது. இறுதியில் ஷகிராவும் வினோதாவும் இணைந்தார்களா.? இந்த சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ஷகீராவாக நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் விநோதாவாக நடித்துள்ள ஸ்ருதி பெரியசாமி இருவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள். கண்களால் கைது செய்யும் அளவுக்கு அழகாக இருக்கும் நிரஞ்சனா அதிகம் பேசாமல் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்து விடுகிறார்.

சுதந்திரத்தை போற்றுவது, ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என எல்லா இடங்களிலும் அதிரடி காட்டி இருக்கிறார் ஸ்ருதி பெரியசாமி. தங்களுக்கு இடையிலான உறவும் காதல் தான் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.

தர்ஷன் குமாரின் பின்னணி இசை கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் கேமராமேன் சதீஷ் கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு பல இடங்களில் ரசிக்கும் வகையில் இருக்கிறது..

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் இயற்கையானது என்பது போல், தன் பாலினத்தவர்கள் மீதே ஏற்படும் காதலும் இயற்கையானது தான், எனவே அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ் பழனி,.

ஏற்கெனவே திருநங்கைகளை மையப்படுத்தி சூல் என்ற படைப்பை உருவாக்கியவர். தற்போது வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்களின் வாழ்க்கையைச் சொல்லி இருக்கிறார். இந்தப்படம் சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் தனி வாழ்க்கை இருக்கிறது என்கிற தாக்கத்தை மக்களிடம் முழுமையாக ஏற்படுத்துமா என உறுதிபட சொல்ல முடியாவிட்டாலும் அவர்களை யோசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி ஒரு படத்தை தயாரித்ததற்காக இதன் தயாரிப்பாளரும் நடிகையுமான நீலிமா இசைக்கும் நம் பாராட்டுக்களை தெரிவித்தாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *