சந்திரமுகி 2 ; விமர்சனம்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகி உள்ளது.

தொழிலதிபரான ராதிகா குடும்பத்தில் சில அசம்பாவிதம் நடக்கிறது, அவரின் இளைய மகள் லட்சுமி மேனனும் விபத்தில் சிக்கி கால்களை இழக்கிறார். இதனால் குலதெய்வம் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுமாறு குருஜி கூறுகிறார்.

அதன்படி ராதிகாவின் குடும்பமும் காதல் திருமணத்தால் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட மூத்த மகளின் பிள்ளைகள், அவர்களின் பாதுகாவலரான ராகவா லாரன்ஸ் ஆகியோரும் குலதெய்வ கோயிலுக்கு செல்கிறார்கள். அங்கு வேட்டையன் ராஜா வாழ்ந்த வீட்டில் தற்காலிகமாக வசிக்கிறார்கள். பாழடைந்த குடும்ப கோவிலை சுத்தம் செய்யும்போது சிலர் இறந்து விடுகிறார்கள்.

கோவிலை சுத்தம் செய்ய சந்திரமுகி அனுமதிக்க மாட்டாள் என சாமியார் கூறுகிறார். கோவிலில் பூஜை நடந்ததா, ஆபத்தில் இருந்து ராதிகா குடும்பம் மீண்டதா ? என்பதே படத்தின் மீதி கதை.

பாண்டியனாகவும், வேட்டையனாகவும் ராகவா லாரன்ஸ் அசத்தியுள்ளார். சந்திரமுகியாக வரும் கங்கனா ரனாவத் நடிப்பாலும், தன் நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்து விட்டார். சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசன் கதாப்பாத்திரத்திலேயே வடிவேலு நடித்துள்ளார். வடிவேலுவும் ராகவா லாரன்ஸும் வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. வீல்சேரில் வரும் லட்சுமி மேனன் சிறப்பாக நடித்துள்ளார்.

ராதிகா, மஹிமா, ஸ்ருஷ்டி, ரவி மரியா, சுபிக்ஷா, விக்னேஷ், சுரேஷ் மேனன், ராவ் ரமேஷ் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாகவே செல்கிறது, அதிலும் சந்திரமுகி யாருக்குள் இருக்கிறார், என்று ஸ்ருஸ்டி, லக்‌ஷ்மி மேனன், மஹிமா, ராதிகா என சோதிக்கும் இடம் நம்மை திரையுடன் ஒன்ற வைக்கின்றது. கங்கனா படத்தின் இரண்டாம் பாதியை தாங்கி பிடித்துள்ளார்.

மரகதமணியின் இசையும், ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

சந்திரமுகி இரண்டாம் பாகம் என்பதை எதோ பெயருக்கு என்றில்லாமல் ப்ராப்பர் சீகுவலாக இதை கொண்டு வந்ததற்கு பி.வாசுவை பாராட்டலாம்.

மொத்தத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தை தாராளமாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.