பைரி ; சினிமா விமர்சனம்


தென் தமிழகத்தின் முக்கிய பகுதியான நாகர்கோயிலில் புறா பந்தயம் பிரபலம். இதனை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘பைரி’ எனும் திரைப்படம்.. அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்த செய்யது மஜித், புறா பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவரது குடும்பம் புறா பந்தயத்தால் பல இழப்புகளை சந்தித்ததால் தாய் விஜி சேகர் புறா வளர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து படிப்பில் ஆர்வம் காட்ட சொல்கிறார். ஆனால், செய்யது மஜித் தாயாரின் எதிர்ப்பை மீறி புறா வளர்க்க ஆரம்பிக்கிறார்.இந்நிலையில் புறா பந்தயம் ஆரம்பிக்கிறது.

இதில் கலந்துக் கொள்ளும் செய்யது மஜித், தாதாவாக இருக்கும் வினு லாரன்ஸ் புறா பந்தையத்தை ஏமாற்றுவதை அறிந்து அவரிடம் சண்டைக்கு போகிறார். இது மிகப்பெரிய மோதலாக மாறுகிறது.இறுதியில் செய்யது மஜித் புறா பந்தயத்தில் வெற்றி பெற்றாரா? செய்யது மஜித் – வினு லாரன்ஸ் இடையேயான மோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செய்யது மஜித், புதுமுக நடிகர் போல் இல்லாமல் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கோபம், காதல், நட்பு, பந்தயத்தில் வெற்றி பெற முயற்சிப்பது என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்படி இருக்கிறது. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் மிரட்டலாக இருப்பதோடு, கவனம் ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது.

நாயகனின் நண்பர் வேடம் அசத்தல், அந்த வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி நடிகராகவும் கவனிக்க வைத்திருக்கிறார். சுயம்பு என்ற வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வினு லாரன்ஸ் ஆகியோரும் கவனிக்கின்றனர்.

கதைக்களமான நாகர்கோயிலின் அழகை ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவுகர்வி வளைத்து வளைத்துப் படம் பிடித்திருக்கிறது.அதோடு அம்மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார். அருண்ராஜின் இசையில் இரசிக்கும்படி அமைந்திருக்கிறது. பின்னணி இசையால் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

புறா பந்தயம் குறித்து இவ்வளவு விரிவாக, அதே நேரம் சுவாரஸ்யமாக ஒரு படம் வந்தது இல்லை என சொல்லலாம். படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்… அப்படி வந்து இப்படி போகிறவர்கள்கூட கதையின் தன்மையுணர்ந்து பங்களிப்பு தந்திருப்பது, புறா பந்தயங்களில் ஊறிப்போன கன்னியாகுமரி, நாகர்கோயில் சுற்று வட்டாரத்தை கதைக்களமாக்கியிருப்பது, கதை மாந்தர்கள் அந்த பகுதி வட்டார வழக்கில் கச்சிதமாக பேசி நடித்திருப்பது படத்திற்கு பலம். வட்டார வழக்கு, இயல்பான நடிப்பு, எதார்த்தமான காட்சிகள், சிறப்பான திரைக்கதை… என இயக்குநர் வெற்றி பெற்று இருக்கிறார்.