மாதவனுக்கும் சின்மயிக்கும் எச்சரிக்கை விடுத்த அஜித் ரசிகரின் முட்டாள்தனம்..!

“கடவுளே’’ – இந்த ஒற்றை வார்த்தை கமெண்ட் போட்டதற்காக இன்று சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்களிடம் பிறாண்டல்களுக்கு ஆளாகியுள்ளார் பின்னணி பாடகி சின்மயி. இதற்கு பின்னணியில் நடந்த விஷயத்தை கேட்டால் இந்த அளவுக்கு கூடவா சில முட்டாள்கள், தங்களை அஜித் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

விஷயம் ஆரம்பித்தது இப்படித்தான். அதாவது நடிகர் மாதவன் தனது டிவிட்டரில் ஒரு படத்தை வெளியிட்டு தனது மகனுக்கு, ‘தல ஆவணி ஆவிட்டம் – மூன்று தலைமுறைகள் – கடவுளின் ஆசிர்வாதத்தால்’ என ஒரு வாக்கியத்தையும் பதிவிட்டு இருந்தார்.. உடனே அஜித் ரசிகர் ஒருவர், “உங்களுக்கு பிடித்த எதற்கும் ‘தல’ என்று சொல்லாதீர்கள்.. அது அஜித்துக்கு மட்டுமே சொந்தமானது.. மாற்றி கொள்ளுங்கள்.. எச்சரிக்கிறேன்” என கமெண்ட் பண்ணியிருந்தார். நம்ம ஊரில்தான் முட்டாள்களுக்கு பஞ்சம் இல்லையே..

இது ஒருபக்கம் இருக்க, இதை ஏதேச்சையாக பார்த்த பாடகி சின்மயி, உடனே இதை காப்பி செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு இப்படியெல்லாம் கூட ஆட்கள் இருக்கிறார்களே என்கிற அர்த்தத்தில் ‘கடவுளே’ என கமெண்ட்டும் போட்டிருந்தார். அவ்வளவுதான்.. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் காண்டாகி விட்டார்கள்.

உடனே சின்மயிக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. சின்மயியும் சளைக்காமல் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். “ஒரு விஷயம் ரொம்பவே சில்லியாக, காமெடியாக தெரிந்ததால் அதை எடுத்து என் பக்கத்தில் போட்டு என் கருத்தை போட்டேன்.. இதில் என்ன தப்பு..?” என்கிறார் சின்மயி.

சின்மயியும் ஒன்றும் அப்பாவி அல்ல.. அவரும் ஊமைக்குசும்பு பிடிச்சவர் தான். ஆனால் மாதவனுக்கு எதிராக அவர் கமெண்ட் போட்டதையும் அதை பதிவிட்டார் என்பதால் சின்மையிக்கு எதிராகவும் டிவிட்டரில் யுத்தம் நடத்தும் அளவுக்கு முட்டாள்கள் சிலர் அஜித் ரசிகர்களாக இருப்பதுதான் வருத்தத்தை தருகிறது. இந்த தொல்லைகள் எல்லாம் வரும் என்று தெரிந்துதானோ என்னவோ, அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார் என்றுதான் நினைக்க தோன்றுகிறது…

சில வருடங்களுக்கு முன் கவுண்டமணி ஒரு படத்தில், “டே யாருடா இங்க தல.. அப்பா மத்தவன்லாம் என்ன முண்டமாவா சுத்திக்கிட்டு இருக்கான்.. இனிமே எவனாவது தல, கிலன்னு சொல்லிட்டு வந்தீங்க” என ஒரு காட்டு காட்டியிருப்பார்.. அப்போது இந்த அளவுக்கு சோஷியல் மீடியா இல்லாததால் யாரும் பிரச்சனையை கிளப்பவில்லை. இப்போது இருப்பதால் ஆளாளுக்கு இப்படி கிளம்பிவிட்டனர் என்றே தெரிகிறது.

போற போக்க பார்த்தா குளித்தல, தருதல, தலக்கோணம், தல வாழை, தல தீபாவளி எல்லாம் கூட சொல்ல கூடாதுன்னு சொல்வாங்க போல!