அகலக்கால் வைத்து அவதிப்படுகிறாரா லிங்குசாமி..?

உத்தம வில்லன் படத்திற்கான பிரச்சனைகள் முடிந்து ஒருவழியாக படமும் ரிலீசாகிவிட்டது. சந்தோசம் தான்.. ஆனால் கமல் படத்திற்கு ரிலீசின்போது எந்தவிதத்திலாவது தடை ஏற்பட்டுவிடுமோ என்கிற தேவையில்லாத பயம் ஒன்றை இதன் மூலம் லிங்குசாமி உருவாக்கிவிட்டாரோ என்கிற கேள்விதான் எழுகிறது..

விஸ்வரூபம் படத்திற்காவது அரசியல் பிரச்சனை.. ஆனால் உத்தம வில்லன் படத்திற்கு அப்படி இப்படி என சில சில்லரை பிரச்சனைகள் வந்தாலும் அதை அழகாக சமாளித்துவிட்ட திருப்பதி பிரதர்ஸ், கடைசியில் ‘சில்லரை’ தான் பிரச்சனைஎன்கிற ரேஞ்சில் படத்தை கொண்டுவந்து சிக்கவைத்தது தான் ரசிகர்களை ரொம்பவே சங்கடப்படுத்தியுள்ள்ளது..

ஆரம்பத்தில் ஒவ்வொரு படமாக தயாரித்து ரிலீஸ் செய்துவந்த திருப்பதி பிரதர்ஸ் பின்னர் படங்களை வாங்கி வெளியிடவும் செய்ததது. இரண்டிலும் ஓரளவுக்கு வருமானம் வரவே, ஒரே நேரத்தில் இரண்டு படம், மூன்று படம் தயாரிக்கும் வேலையை ஆரம்பித்தபோது தான் சிக்கலும் ஆரம்பித்தது..

எல்லா நேரமும் ஒரேபோல இருக்காது அல்லவா.. ? அவர் இயக்கிய சண்டக்கோழி படத்தில் ராஜ்கிரண் ஒரு வசனம் பேசுவார்.. எங்கேயோ எதையோ மிச்சம் வச்சுட்டு வந்துருக்கான் என்று.. அந்த மாதிரி உத்தம வில்லனுக்காக வாங்கிய இடங்களில் மிச்சம் வைத்தது இப்போது உத்தம் வில்லன் ரிலீஸை பதம் பார்த்து விட்டது.

அஞ்சான் படம் தயாரிப்பில் இருக்கும்போதே ஒரு பக்கம் உத்தம் வில்லன் படத்தையும் இன்னொரு பக்கம் இடம் பொருள் ஏவல் படத்தையும் தயாரிக்கும் வேளைகளில் இறங்கியது திருப்பதி பிரதர்ஸ்.. இதுமட்டுமா இப்போது கூட அவர்களது தயாரிப்பில் ரஜினி முருகன், பாலாஜி சக்திவேலின் படம், பன்னீர்செல்வம் இயக்கும் படம் என இன்னும் மூன்று படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இங்கேதான் கொஞ்சம் நிதானம் காட்ட தவறிவிட்டார் லிங்குசாமி. அப்படி என்ன அவசரம்..? அவ்வளவு பெரிய தயாரிப்பாளரான தாணுவே ஒரு நேரத்தில் ஒரு படம் தான் என்பதை இப்போதுவரை கடைபிடித்து வருகிறார். காரணம் என்ன..? லாபமோ நட்டமோ அந்தப்படத்தின் வரவு செலவுகளை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு போவது தான் பாதுகாப்பு என்பது அவரது எண்ணம்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இன்று அல்லல் படுவதற்கு காரணம் என்ன..? அகலக்கால் வைத்தது தானே.. பூலோகம் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என மூன்று வருடங்களாக பூவா தலையா போட்டு பெட் கட்டி விளையாடும் அளவுக்கு வருடக்கணக்கில் முடங்கி கிடக்கிறது.. ஒரு காலத்தில் பிரமாண்டம் காட்டிய ஏ.எம்.ரத்னம் இப்படி சிக்கலில் மாட்டித்தான் நொடிந்துபோய், இதோ இப்போது அஜித்தின் புண்ணியத்தால் பழையபடி மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

சரி.. விஷயத்துக்கு வருவோம்.. ஏற்கனவே கோச்சடையான், லிங்கா பிரச்சனையில் இங்கே ஈராஸ் நிறுவனத்தின் தலையை போட்டு உருட்டிக்கொண்டு இருக்கும்போது, மீண்டும் இவ்வளவு பெரிய படத்தை தூக்கி அவர்களிடம் ஏன் கொடுக்கவேண்டும்.. உலகளாவிய ரிலீஸ் பண்ணுதற்காகத்தான் கொடுத்தோம் என்று சொன்னால் கடைசி நேரத்தில் அவர்கள் ஏன் அந்தப்படத்தை உங்களிடமே திரும்ப கொடுத்தார்கள்..

இப்போது ஸ்டுடியோ கிரீன் அதை ரிலீஸ் பண்ணியது மட்டும் எப்படி..? இதை முதலிலேயே செய்திருக்கலாமே..? கமல் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்திருந்தால் லிங்குசாமியின் கௌரவமும் காப்பற்றப்பட்டிருக்கும்.. கமலின் கௌரவமும் காப்பாற்றப்பட்டிருக்கும்.. இனி வரும் காலங்களிலாவது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் லிங்குசாமி கவனமாக எடுத்து வைப்பார் என நம்புகிறோம்..