மிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்


கடந்த சில நாட்களுக்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை தடைசெய்ய சொல்லி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் காவலர் ஒருவரை சிலர் தாக்கும் வீடியோ வெளியானது. “சீருடை அணிந்த காவலர்களை தாக்கும் போக்கு வன்முறையின் உச்சம்.. கடுமையான சட்டங்கள் மூலம் இதனை அடக்கவேண்டும்” என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ரஜினியின் இந்தக்கருத்து போராட்டக்காரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.. போராடுபவர்களுக்கு ஆதரவாக பேசுவதை விட்டுவிட்டு, அவர்களை அடித்து உதைத்து கொடுமைபடுத்திய காவல்துறைக்கு ஆதரவாக ரஜினி பேசுவதா என பலர் கொந்தளித்தனர். இன்னும் சிலர் அவர் நியாயதைத்தானே சொல்கிறார் என விளக்கம் சொன்னார்கள்..

இந்தநிலையில் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்த ரஜினி, “மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழகஅரசே பொறுப்பு.” என்று உடனே தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

ஆனாலும் மனம் ஆறாத ரஜினி மீண்டும் ஒரு வீடியோ மூலமாக, “அரசின் அலட்சியம், உளவுத்துறையின் தோல்வி, காவல்துறையின் வரம்பு மீறிய சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலை கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளார் ரஜினி.

அன்று காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அதே ரஜினி தான் இன்று அவர்களுக்கு எதிராக மிருகத்தனமான செயல் என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அன்று தவறு போராட்டக்காரர்கள் மீது இருந்தது.. இன்று தவறு காவல்துறை பக்கம் இருக்கிறது. அதனால் தனக்கு தப்பு என எது தோன்றுகிறதோ, அதற்கு நியாயமாக கண்டனம் தெரிவித்துள்ளார் ரஜினி என்பது வெளிச்சமாகியுள்ளது.