அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன் – விமர்சனம்

பெருமாளின் அவதாரங்களையும் லீலைகளையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு பக்தனுடன் நண்பனாக சரிக்குச்சமமாக நட்பு பாரட்டும் புதிய முகத்தை பார்க்கும் வாய்ப்பை தந்திருக்கிறது இந்த அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்.

சிறுவயதில் இருந்தே பெருமாளை நினைத்து தவம் மேற்கொள்கிறார் நாகார்ஜூனா. அதனாலேயே தனக்கு திருமணமே வேண்டாம் என கூறி இறைசேவை மேற்கொள்ள கிளம்புகிறார். திருப்பதியில் தங்கி அங்கே இறைப்பணிகள் ஆற்றிவரும் அவருக்கு கிடைக்கும் செல்வாக்கு அந்த பகுதியில் இருக்கும் சிலருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. அதனை இறைவனின் அருளுடன் சமாளிக்கிறார் நாகார்ஜூனா.

அதேநேரம் பக்தனின் தவத்திற்கு இறங்கி அவருக்கு காட்சி தரும் பெருமாள், அவருடன் அவ்வப்போது பந்தயம் வைத்து தாயம் விளையாடுவதை வழக்கமாக கொள்கிறார். மேலும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் தன்னைவிட தனது பக்தர் நாகார்ஜுனாவின் புகழ்பாட ஏற்பாடு செய்கிறார் இறைவன்.

இதில் துளியும் விருப்பம் இல்லாத நாகார்ஜூனா, இதேபோல தாயம் விளையாடி இறுதியில் பந்தயத்தில் தோற்கும் பெருமாளிடம் வழக்கம்போல் பரிசாக கேட்ட விஷயம் பெருமாளை மட்டுமல்ல, அவரது சகதர்மினிகளையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. அப்படி என்ன பரிசு கேட்டார் நாகார்ஜுனா..? அதை பெருமாளால் கொடுக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

ஆக்சன் ஹீரோவாக பார்த்து வந்த நாகார்ஜூனாவை ஆன்மிகம் பரப்பும் ஹாத்திராம் பாபாஜி என்கிற இறை பக்தராக பார்ப்பதே புது அனுபவமாக இருக்கிறது. இறைவன் தன்னை தேடிவந்தும் அவரை அறிந்துகொள்ள முடியாமல் போனதை எண்ணி குமுறுவதும், இறைதரிசனம் பெற்ற பின்னர் ஒரு நண்பனைப்போல அவருடன் சரிக்கு சமமாக விளையாடும் காட்சிகள் எல்லாம் அற்புதம். அதிலும் கடவுளுக்கே திருக்கல்யாணம் செய்து வைக்கும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

பெருமாளுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பக்தையாக அனுஷ்காவும் நம் மனதில் நிறைகிறார். பெருமாளாக நடித்துள்ள சௌரப் ராஜ் ஜெயின் வரும் காட்சிகளில் எல்லாம் இறைவனை தரிசித்த உணர்வே ஏற்படுகிறது. அந்த அளவுக்கு அவரது பாந்தமான நடிப்பு நாம்மை உருக வைக்கிறது. கோண நேரமே வந்தாலும் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் ஜெகபதிபாபு மனதில் நிற்கிறார். படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் பாத்திரமறிந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.

பாடல்கள் அடிக்கடி இடம்பெற்றாலும், இசையமைப்பாளர் மரகதமணியும் ஒளிப்பதிவாளர் கோபால் ரெட்டியும் ரசித்து அனுபவிக்கும் விதமாக அவற்றை சலிப்பு தட்டாமல் கொடுத்திருக்கிறார்கள்.
இறைவனின் லீலைகளையும் பக்தனின் உற்சாகத்தையும் பார்க்க கண்கோடி வேண்டும்.. அப்படி ஒரு அனுபவத்தை இந்த பிரமாண்ட நாயகன்’ படம் நமக்கு தருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

பக்திப்படங்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் அதை கொடுக்கும் விதத்தில் கொடுக்கவேண்டும்.. அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கே.ராகவேந்திர ராவ்..