பீச்சாங்கை – விமர்சனம்


நகரின் மிகப்பெரிய பிக்பாக்கெட் திருடன் ஆர்.எஸ்.கார்த்திக்.. இடது கையை மட்டுமே உபயோகப்படுத்தி தொழிலை நடத்துகிறார்.. திடீரென விபத்தில் காயம்பட்ட அவரது இடதுகை (பீச்சாங்கை) அதன்பின்னர் அவருக்கு ஒத்துழைக்க முயன்று தன்னிஷ்டப்படி இயங்குகிறது.. நினைக்கவே பேஜாராக இருக்கிறது அல்லவா..? இதைத்தான் ‘பீச்சாங்கை’ படத்தின் மையக்கருவாக எடுத்துள்ளார்கள்.. இதில் அரசியல், குழந்தை கடத்தல், காமெடி தாதா என கலந்துகட்டி கலகலப்பாக கொடுத்துள்ளார்கள்.

நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் அறிமுகம் தான் என்றாலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் அவரை புதுமுகம் என்கிற தோற்றத்தில் இருந்து விலக்கி ஏதோ பழகிய ஒருத்தரை போல நம்மை உணர வைக்கிறது. அவரும் எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல் கதையின் போக்கிற்கு ஏற்றபடி தானும் அடித்து, மற்றவரிடமும் அடிவாங்கி என அந்த கேரக்டராகவே மாறியுள்ளார். சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பால பாடம் இதுதான்.

கதாநாயகி அஞ்சலி ராவ் மிகவும் சாந்தமான பெண்ணாக நடிப்பில் நம்மை கவருகிறார்.. அரசியல்வாதியாக எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட மற்றவர்கள் அனைவருமே நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்லப்படவேண்டியவர் தாதாவாக வரும் பொன்முடியும் அவரது காமெடி கலந்த வில்லத்தனமான நடிப்பும் தான்.. அவருக்கு ட்ரைவராக வரும் அந்த மொட்டைத்தலையர் காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார்.

நாயகன் பீச்சாங்கையால் படும் அவஸ்தைகளை பல இடங்களில் காமெடியாகவும் சில இடங்களில் புத்திசாலித்தனமாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் அசோக். அதேபோல அரசியல்வாதிகளின் போர்ஷனை கொஞ்சம் காமெடி கலந்து டெரர் ஆகவும் ரவுடிகளின் போர்ஷனை கொஞ்சம் காமெடியாகவும் மாற்றி சீரியஸ் மூடிலிருந்து காமெடி மூடுக்கும் நம்மை படம் முழுதும் தயார்படுத்தியுள்ளார்..

இப்படி நடந்தால் என்கிற கற்பனையுடன் உருவாகியுள்ள இந்த பீச்சாங்கை ஜாலியாக சிரித்து மகிழ உத்தரவாதம் தருகிறது.