நிறங்கள் மூன்று ; விமர்சனம்

திரைப்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நாயகன் அதர்வா, போலீஸ் இன்ஸ்பெக்டரான தனது தந்தை சரத்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் தனியாக வசிக்கிறார். பள்ளி மாணவரான துஷ்யந்த், தனது பெற்றோர் தனது விருப்பத்திற்கு எதிராக இருப்பதால் அவர்கள் மீது கோபமாக இருப்பதோடு, தனது பள்ளி ஆசிரியரான ரஹ்மானை நாயகனாக பார்க்கிறார்.

இந்த சமயமத்தில், ஆசிரியர் ரஹ்மானின் மகள் அம்மு அபிராமி திடீரென்று காணாமல் போகிறார். அவரை தேடும் பயணத்தில் மனிதர்களின் மற்றொரு முகங்கள் தெரிய வருவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் ‘நிறங்கள் மூன்று’.

இந்த மூன்று சம்பவங்களும் வெவ்வேறு பாதைகளில் போனாலும் இறுதியில் ஒரு நேர்கோட்டில் வந்து இணைகிறது. அதுதான் நிறங்கள் மூன்று படத்தின் மொத்தக் கதை.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் எல்லாப் பாத்திரங்களும் வாழ்க்கையின் எதார்த்தத்தின் அடிப்படையில் புனையப்பட்டிருப்பது கதைக்கு உயிரோட்டத்தை தந்திருக்கிறது.

நாயகன் அதர்வா, தனக்கே உரித்தான உடல்மொழியில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். போதைப் பொருளை சற்று ஓவர் டோசேஜ் எடுத்திருக்கிறார். அதை குறைத்திருந்திருக்கலாம்.

காவல் துறை அதிகாரியாக சரத்குமார் நெகடிவாக காட்டப்பட்டாலும் அவரின் உன்னத உள்ளத்தை அறிந்து கொள்ளும் போது ரசிக்கலாம்.

மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஹ்மான், தனது மற்றொரு நிறத்தின் மூலம் அதிர்ச்சியளித்தாலும், சமூகத்தில் நடக்கும் இத்தகைய அவலங்களுக்கான பின்னணி பற்றி யோசிக்க வைக்கிறார்.

பள்ளி மாணவனாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், அம்மு அபிராமி, உமா பத்மநாபன் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாயின் இசை, டிஜோ டாமியின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு அனைத்துமே எளிமையான கதையை சுவாரஸ்யமாக கடத்த உதவியிருக்கிறது.

இயக்குனர் கார்த்திக் நரேன் கதாபாத்திரங்களையும் அவற்றின் நோக்கங்களையும் முதல் பாதி முழுவதிலும் சொல்கிறார். முதல் பாதியில் வெளிப்படுத்தாத காரணங்களை இரண்டாம் பாதியில் வெளிப்படுத்தி இருந்தாலும் சில குறைகளை நிவர்த்தி செய்து இருந்தால் மீண்டும் ஒரு துருவங்கள் பதினாறு நமக்குக் கிடைத்திருக்கும்.