செம – விமர்சனம்


ஜி.வி,பிரகாஷுக்கு அவரது அம்மா சுஜாதா பார்க்கும் வரன்கள் எல்லாம் தட்டிப்போகிறது. மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க ஜோதிடர் கெடு வேறு வைத்துவிட, வெளியூரில் இருக்கும் சமையல் காண்ட்ராக்டரான மன்சூர் அலிகான் மகள் அர்த்தனாவை பெண் பார்க்கிறார்கள்.

இருதரப்புக்கும் பிடித்துபோய் நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்த நிலையில் வில்லனாக அர்த்தனாவை ஒருதலையாக காதலிக்கும் அந்த ஊர் எம்.எம்.ஏ மகன் குறுக்கிடுகிறார்., ஊரெல்லாம் கடன் வங்கி வைத்திருக்கும் மன்சூர் அலிகானை அழைத்து அவரது கடன்களை எல்லாம் செட்டில் செய்துவிடுவதாக கூறி அர்த்தானவை பெண் கேட்கிறார்.

கடன் பிரச்சனை தீர்ந்தால் போதும் என நினைக்கும் மன்சூர், எம்.எல்.ஏ மகனுக்கு மகளை தருவதாக வாக்கு கொடுத்துவிட்டு, ஜி.வி.பிரகாஷிடம் நிச்ச்யதார்த்தத்தை ரத்து செய்ய சொல்கிறார் திருமணம் நின்றதை நினைத்து ஜி.வி.பிரகாஷின் அம்மா, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.

இதனால், கோபமடையும் ஜி.வி.பிரகாஷ், மன்சூர் அலிகானிடம் உன் பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன் என்று சவால் விடுகிறார். இறுதியில் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சவாலை வென்றாரா? மன்சூர் அலிகான், எம்.எல்.ஏ. மகனுக்கு அர்த்தனாவை திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை

சிட்டி பையனாக பார்த்துவந்த ஜி.வி.பிரகாஷை கிராமத்தில் காய்கறி விற்பவராக பார்ப்பது புதுசாகத்தான் இருக்கிறது. காதலி ஏமாற்றி விடுவாளோ என நினைத்து பேசும் இடங்களில் எல்லாம் நெடுவாசல் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது போலவே பேசுகிறார் மனிதர். இந்த மாதிரி கதைக்கு இந்த நாயகி தான் பொருத்தமாக இருப்பார் என சொல்லும்படியாக ஜாடிக்கேத்த மூடியாக அழகாக பொருந்துகிறார் அர்த்தனா.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் மனதை கொள்ளை கொள்கிறார்.

ஹீரோவின் நண்பனாக படம் முழுக்க வரும் யோகிபாபுவின் கமேடிகளில் சுவை குறைவே. முழுப்படத்திற்கும் அவர் காமெடியனாக பயணிக்க வேண்டுமென்றால் தயவுசெய்து வசனங்களில் அவருக்கேற்ற தீனி போடுங்கள்.. அவரை வீணடிக்காதீர்கள்..

மன்சூர் அலிகானை இப்போதெல்லாம் என்னமா உருமாற்றுகிறார்கள் என்கிற ஆச்சர்யம் ஏற்படமால் இல்லை.. வில்லத்தனம் பிளஸ் காமெடி இரண்டையும் மிக்ஸ் பண்ணி அடித்திருக்கிறார். கணவனை சமாளித்து மகளின் விருப்பத்தை நிறைவேற்றும் கேரக்டரில் கோவை சரளா வழக்கம்போல.. பொசுக் பொசுக்கென தற்கொலைக்கு முயற்சிக்கும் பருத்தி வீரன் சுஜாதாவும் கலகலப்பூட்டவே செய்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘சண்டாளி…’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. இயக்குனர் பாண்டிராஜின் வசனமும் படத்துக்கு கைக்கொடுத்திருக்கிறது. காதுல பூ வைக்கும் விஷயங்கள் படம் நெடுக, குறிப்பாக இடைவேளைக்குப்பின் நிறைய இருந்தாலும் லாஜிக்கெல்லாம் பார்க்கமால் ஜாலியாக ரசித்துவிட்டு வரலாம் எனும்படியாக ஒரு படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த்..