
கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியைச் சுற்றி கதை நகர்கிறது. 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்திற்கு சற்று முன்பு விவேக் (சூர்யா ராஜ் வீரபத்தினி), ரோஹித் (சரண் லக்கராஜு) ஆகிய மாணவர்கள் இந்த விடுதிக்கு வருகின்றனர். முன்பு மனநலக் காப்பகமாக இருந்து, ஒரு கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு பூட்டப்பட்டிருந்த அந்த விடுதியின் 418 எண் கொண்ட அறைக்கு அருகே இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள்.
அந்த அறைக்குச் செல்லக் கூடாது என எச்சரிக்கப்பட்ட நிலையிலும், விவேக் அங்கு சில விசித்திரமான அமானுஷ்ய சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகிறான். அதன்பின் அவன் நடத்தும் விசாரணையில், கடந்த காலத்தில் அநீதி இழைக்கப்பட்டு உயிரிழந்த தேவிகா (சைத்ரா ஜே ஆச்சார்) என்ற யக்ஷகானா நடனக் கலைஞரின் ஆன்மா பழிவாங்கத் துடிப்பது தெரியவருகிறது.
அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான மோதலாகவும், அந்த அறையின் பின்னால் இருக்கும் திகிலூட்டும் மர்மத்தை அவிழ்க்கும் கதையாகவும் மீதிப்படம் நகர்கிறது.
இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்து ஒட்டுமொத்த படத்தையும் தன் தோள்களில் தாங்கி நிற்பவர் தேவிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள முன்னணி நடிகை சைத்ரா ஜே ஆச்சார் தான்.. யக்ஷகானா நடனக் கலைஞராகவும், பழிவாங்கும் ஆன்மாவாகவும் தனது வசீகரமான கண்கள் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பு மூலம் திகிலூட்டும் அதேவேளையில் ரசிகர்களின் அனுதாபத்தையும் பெறுகிறார்.
கல்லூரி மாணவர்களாக வரும் சூர்யா ராஜ் வீரபத்தினி மற்றும் சரண் லக்கராஜு ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்குத் தேவையான பங்களிப்பை வழங்கி நேர்த்தியாக நடித்துள்ளனர். குறிப்பாக சூர்யா ராஜ், பயம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஒரு பதற்றமான இளைஞனின் நிலையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
கல்லூரி ஆலோசகர் மற்றும் உளவியலாளராக வரும் ரமேஷ் இந்திரா மற்றும் விடுதி வார்டனாக வரும் கோட்டா ஜெயராம் ஆகியோர் தங்களது முதிர்ந்த நடிப்பால் கதையின் தீவிரத்தன்மையை கூட்டுகிறார்கள். சாய்ஷாவாக வரும் பிரீதி பகதாலா தனது சுட்டித்தனமான நடிப்பால் படத்திற்கு புதுமை சேர்க்கிறார். இந்தப் படத்தில் தனியாக ஒரு வில்லன் நடிகர் என்று யாரும் இல்லை, சமூகத்தின் அணுகுமுறைகளும் தேவிகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுமே இதில் வில்லத்தனமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன் படத்தின் பயமுறுத்தும் சூழலை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இயற்கை வெளிச்சம் மற்றும் விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி அவர் அமைத்துள்ள இருண்ட காட்சிகளின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகுந்த பலம் சேர்க்கிறது. இசையமைப்பாளர் வெங்கீ ஜிஜியின் பின்னணி இசை மற்றும் அனுபவ் சியின் ஒலி வடிவமைப்பு ஆகியவை திகில் காட்சிகளுக்கு அசாத்தியமான நம்பகத்தன்மையைக் கொடுத்து, ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வருகின்றன.
இயக்குனர் கீர்த்தன் நடகௌடா தனது முதல் படத்திலேயே ஒரு வழக்கமான பேய்க் கதையை யக்ஷகானா கலை மற்றும் உளவியல் சிக்கல்களோடு இணைத்து புதிய கோணத்தில் சொல்ல முயன்றதில் அவரது திறமை தெரிகிறது. திரைக்கதையின் பிளஸ் என்னவென்றால், முதல் பாதியை ஒரு திகைப்பூட்டும் கனவு போலவும், இரண்டாம் பாதியில் வரும் தேவிகாவின் 40 நிமிட பிளாஷ்பேக் காட்சிகளையும் மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் நேர்த்தியாகவும் இயக்குனர் அமைத்துள்ளார்.
ஆரம்பத்தில் வரும் கல்லூரிக் காட்சிகள் மற்றும் சீனியர் மாணவர்களின் ராகிங் காட்சிகள் கதையின் வேகத்தைக் குறைத்து மந்தமாக நகர்கின்றன. மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதும், இறுதிக்கட்ட க்ளைமாக்ஸ் திருப்பங்கள் குழப்பமாகவும் அரைகுறையாகவும் முடிவடைவதும் திரைக்கதையின் பலவீனமாக அமைந்துவிடுகிறது. அமானுஷ்ய திகில் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் ஒரு சுவாரசியமான அனுபவமாக அமையும்.









