இறைவன் ; விமர்சனம்

இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ளது இறைவன்.

சென்னையில் மிகக் கொடூரமாக இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதை நிகழ்த்தும் சீரியல் கில்லரை (ராகுல் போஸ்) கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் காவல் உதவி ஆணையர்கள் அர்ஜுனும் (ஜெயம் ரவி) ஆண்ட்ரூவும் (நரேன்). இதில் ஒரு துர்நிகழ்வு நடைபெற, போலீஸ் வேலையை விட்டு ஒதுங்குகிறார் அர்ஜுன். என்றாலும் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறான் சைக்கோ கொலையாளி. இதற்கு என்ன காரணம்? யார் அந்தக் கொலையாளி? இருவருக்கும் இடையிலான துரத்தலில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கின்றன என்பது படத்தின் மீதி கதை.

ஹீரோ ஜெயம் ரவி ஏற்கனவே பல போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இறைவன் படத்தில் வரும் அர்ஜுன் ரோலில் சற்று மாறுபட்டு நடித்துள்ளார். வில்லன் மூலம் இவர் அனுபவிக்கும் மனநிலை சார்ந்த காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார். ராகுல் போஸ் தனது நடிப்பில் நம்முடைய மூளையை சலவை செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் பாதியில் இருக்கையின் நுனிக்கு நம்மை வரவைக்கிறார் இயக்குநர். திரைக்கதை நம்மை கவர்கிறது. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்கிறார்கள். தொடக்கத்திலேயே கொலையாளியைக் காட்டிவிடுகிறார்கள். எனவே, சஸ்பென்ஸ் உடைந்து, அவர் செய்யும் கொடூர கொலைகள் எல்லாமே பாவமாக இருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

நல்ல சைக்கோ த்ரில்லராக உருவாக்கப்பட்டிருக்கிறது இறைவன். ஆனால் சில இடங்களில் திரைக்கதை வலுவில்லாமல் போக சுமார் ரகமாக்கிவிட்டது.