தேஜாவு ; திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்கள் வரவு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அதில் சிலரே தங்களது முதல் படத்திலேயே தங்களது தடத்தை பதிப்பார்கள். இந்த தேஜாவு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ள அரவிந்த் ஸ்ரீனிவாசன், பத்திரிகையாளராக இருந்து யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் இயக்குனரானவர்.

எழுத்தாளர் அச்யுத் குமார் தான் எழுதும் கதாப்பாத்திரங்கள் நிஜத்தில் வந்து தன்னை மிரட்டுகிறார்கள் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அதுமட்டுமின்றி தன் கதையில் கடத்தப்பட்டிருக்கும் பெண்ணை காப்பாற்ற வேண்டும் என கூறுகிறார்.

அதே சமயம் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக பணிபுரியும் மதுபாலாவின் மகள் ஸ்மிருத்தி வெங்கட்டை யாரோ கடத்திவிடுகிறார்கள். இதை வெளியில் தெரியாமல் தனிப்பட்ட முறையில் விசாரிக்க அண்டர்கவர் ஆபிசர் ஒருவரை கேட்கிறார். அந்த ஆபிசராக அருள்நிதி வருகிறார். வந்த வேகத்தில் இதை விசாரிக்க தீவிரமாக களத்தில் இறங்குகிறார்.

அப்போது அச்யுத் குமாரை விசாரிக்கிறார். அவர் கதையாக எழுதுவது நிஜத்தில் நடப்பதை கண்டு, அருள்நிதியும் மதுபாலாவும் அதிர்ச்சியடைகிறார்கள். கடத்தப்பட்ட ஸ்மிருத்தியை அருள்நிதி கண்டுபிடித்தாரா? அச்யுத் எப்படி நடப்பதை முன்கூட்டியே எழுதுகிறார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக் கதை.

போலீஸ் உடை அணியாத அண்டர்கவர் ஆபிசர் கதாப்பாத்திரத்தில் அருள்நிதி கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கம்பீரமான உடல்மொழியில் மிரட்டியிருக்கிறார். இவரின் கதாப்பாத்திரம் பற்றிய உண்மை தெரியவரும் காட்சி அற்புதம்.

மதுபாலா டி.ஜி.பி.யாக நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். எழுத்தாளராக வரும் அச்யுத் குமார், டி.ஜி.பி. மகளாக நடித்திருக்கும் ஸ்மிருத்தி வெங்கட், கான்ஸ்டபிளாக வரும் காளி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஜிப்ரானின் இசையும், பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசனுக்கு பாராட்டுக்கள். முதல் படம் போல் இல்லாமல் மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சூப்பரான த்ரில்லர் படம் இந்த தேஜாவு.