இங்க நான் தான் கிங்கு ; விமர்சனம்


ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் பேசிய பஞ்ச வசனம் இங்க நான் தான் கிங்கு.. ரஜினி படத்தின் டைட்டில் கிடைக்கவில்லையா, ரஜினி பேசிய வசனத்தை டைட்டிலா வச்சுட்டா போச்சு என்கிற பாணியில் அதையே டைட்டிலாக வைத்த சந்தானம் கிங் என நிரூபித்திருக்கிறாரா ? பார்க்கலாம்.

வீடு இருந்தால் தான் பெண் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீடு வாங்குகிறார் சந்தானம். அதற்கேற்றபடி ஜாமீன் குடும்பமான தம்பிராமையாவின் மகள் பிரியாலயாவும் மணப்பெண்ணாக கிடைக்கிறார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு தான் ஜமீன் குடும்பத்துக்கு ரூ.10 கோடி கடன் இருக்கும் உண்மை சந்தானத்திற்கு தெரிய வருகிறது.

கடனுக்காக ஜமீன் வீடு, அதில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் பிரித்துக் கொடுப்பதோடு, தனது மருமகன் சந்தானத்துடன் சென்னைக்கு வருகிறார். இந்த நிலையில், வெடிகுண்டு வைப்பதற்காக தீவிரவாத கும்பல் ஒன்று சென்னைக்குள் நுழைகிறது. அவர்கள் மூலம் சந்தானத்திற்கு ரூ.50 லட்சம் கிடைக்க கூடிய வாய்ப்பு தேடி வருகிறது. அதேசமயம் குண்டு வைக்க திட்டமிடும் தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஒருவர் சந்தானம் மற்றும் அவரது குடும்பத்தால் கொல்லப்படுகிறார்.

சந்தானத்தின் கடன் பிரச்சனை தீர்ந்ததா..? அல்லது இந்த தீவிரவாத கும்பலால் பிரச்சனை இன்னும் அதிகமாகியதா என்பது மீதிக்கதை.

சந்தானம் வழக்கம் போல் காமெடி நாயகனாக வலம் வந்தாலும், கலர்புல்லான ஆடைகள், அட்டகாசமான நடனம், காதல் பாடல் காட்சியில் நாயகியுடன் நெருக்கம் என்று கமர்ஷியல் நாயகனாக கவனம் ஈர்க்கிறார்.

நாயகி பிரியமாலா அழகாகவும் இருக்கிறார், நன்றாகவும் நடிக்கிறார். நடனம் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார். தமிழ் திரை உலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் விவேக் பிரசன்னாவிற்கு இரட்டை வேடம் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். அவரும் அதை உணர்ந்து நன்றாக நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். தம்பிராமையா, பாலசரவணன், முனிஷ்காந்த், சேசு, மாறன் ஆகியோரின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிப்பு வரவழைக்கும் வகையில் உள்ளது. சேசுவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே அவரது இசையில் வெளியான பாடல்கள் சாயல்களில் இருந்தாலும் கேட்கும் ரகமாக இருக்கிறது.. ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் படம் முழுவதையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.

இயக்குநர் ஆனந்த் நாராயணனின் டைரக்சனில் முதல் பாதியில் படம் சில இடங்களில் காமெடியாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் திருப்பங்களால் நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஏற்கனவே பார்த்த பல பழைய காட்சிகளின் சாயல்கள், வெறுப்பேற்றும் சில காமெடிகள் இருந்தாலும் மொத்தத்தில் ச்ம்மருக்கான கொண்டாட்டம் தான் இங்க இந்தப்படம் என்பதில் சந்தேகமே இல்லை.

‘இங்க நான் தான் கிங்கு’ ; கொஞ்ச நாளைக்கு நின்னு விளையாடுவான்