தலைக்கூத்தல் ; விமர்சனம்

ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, வசுந்தரா நடிப்பில் வெளியாகி உள்ள படம் தலைக்கூத்தல்.

தனியார் நிறுவன செக்யூரிட்டி சமுத்திரக்கனி. அவருடைய மனைவி வசுந்தரா. இந்த தம்பதிக்கு ஒரு மகள். இவர்களுடன் மரண படுக்கையில் சமுத்திரக்கனியின் வயதான அப்பா. அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சமுத்திரக்கனியின் தந்தை எல்லோருக்கும் பாரமாக தோன்றுகிறார். அந்த கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்கிறார்கள்.

அதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். ஆனால் பாசத் தந்தையை அநியாயமாக கொலை செய்வதற்கு சம்மதிக்காமல் துடிக்கிறார் சமுத்திரக்கனி. மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தந்தைக்காக செலவு செய்கிறார்.

சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார். ஏற்கனவே அப்பாவை காரணம் காட்டி சமுத்திரக்கனியிடம் வம்பு இழுத்த வசுந்தரா கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும் மேலும் சண்டை போடுகிறார். சமுத்திரக்கனியால் மனைவியை சமாதானப்படுத்த முடிந்ததா ? அப்பாவின் உயிர் தப்பித்ததா ? என்பதே தலைக்கூத்தல் படத்தின் மீதிக்கதை.

சமுத்திரக்கனி அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. பாசமான மகனாக, மனைவி அவமானப்படுத்துவதை தாங்கும் கணவனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எதார்த்தமான கதாப்பாத்திரத்தில் வசுந்தரா சிறப்பாக நடித்துள்ளார். கதிர், ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். படுத்துக்கொண்டே மனதை உருக்குகிறார் கலைச் செல்வன்.

கண்ணன் நாராயணனின் மனதை வருடும் இசையும், மார்டின் டான் ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். அடிதடி, பஞ்ச் வசனங்கள் இல்லாமல் சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து மனதை தொடும் அழுத்தமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மொத்தத்தில் தலைக்கூத்தல் பார்க்கவேண்டிய படம்.