இரவின் நிழல் ; திரை விமர்சனம்

ஒத்த செருப்பு படத்திற்கு பின் மீண்டும் வித்தியாசமான படைப்பை கொடுத்திருக்கிறார் பார்த்திபன். அதுவே இரவின் நிழல்.

உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். அதாவது, கேமரா ஆன் செய்யப்பட பிறகு முழு படத்தின் படபிடிப்பு தொடர்ச்சியாக எடுத்து முடித்த பின்தான் கேமரா ஆப் செய்யப்படும். இதில் யாராவது ஒருவர் தவறு செய்தாலும் மீண்டும் மீண்டும் படமாக்க வேண்டும். இதுதான் நான் லீனியர் சிங்கிள் ஷாட்.

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம், ஊடகங்களில் பேசுபொருளாகிறது.

இயக்குநரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நம்பும் அவருடைய மனைவியும் மகளும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போய் விடுகிறார்கள். ஃபைனான்சியர் நந்துவைக் கைது செய்ய போலீஸ் துரத்துகிறது. தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நந்து, ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து தற்போது பாழடைந்து, புதர்மண்டிக் கிடக்கும் தனக்கு மிகவும் பரிச்சயமான ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். அங்கிருந்து, ஊடகங்கள் அறிந்திராத, தன் வாழ்க்கைக் கதையை தனது திறன்பேசியில் ‘ஆடியோ’வாகப் பதிந்தபடி விவரிக்கத் தொடங்குகிறார்.

சிறுவயதில் திருட்டு வேலை செய்து பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று, இளமைப்பருவத்தில் காதலில் விழுகிறார் பார்த்திபன். காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார், ஆனால் அந்த பெண் இவரை ஏமாற்றி விடுகிறாள். அதற்கு அவள் சொல்லும் காரணம் பணம்.

பின் ஆந்திராவுக்கு சென்று ஒரு பெண்ணை திருமணம் முடிக்கிறார், ஆனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் பார்த்திபனின் கர்பிணி மனைவியை நிர்வாணப்படுத்துகிறார்கள். இதனால் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். இதன்பிறகு ஒரு ஆசிரமத்தில் சேரும் பார்த்திபன் நகைகளை கொள்ளையடித்து பெரிய பைனான்சியராகிறார். அதன் பின் விதி அவரை வேறு ரூபத்தில் துரத்துகிறது. அது என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் நிகழ்காலம், கடந்த காலம் என கலந்து கலந்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் பார்த்திபன். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பார்த்திபன் நிச்சயம் பேசப்படுவார். இதில் மூன்று கதாநாயகிகள் வந்தாலும், ஆந்திரா மனைவியாக நடித்திருக்கும் பிரிகிதா கவனம் பெறுகிறார்.

படம் ஒரே ஷாட் என்பதால், இதில் நடித்தவர்கள் அனைவரும் அதை சரியாக புரிந்து நடிக்க வேண்டும். அந்த வகையில் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்ட வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும், ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். 50 விதமான செட்களை அடுத்தடுத்து நேர்த்தியாக அமைத்த கலை இயக்குனர் விஜய் முருகனை பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் இந்த இரவின் நிழல் பல விருதுகளை குவிக்க போவது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *