கார்கி ; திரை விமர்சனம்

இயக்குனர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் கார்கி.

சாய் பல்லவி ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியை. பத்து வயது தங்கை, அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் அப்பா, வீட்டில் இருந்து மாவு அரைத்து விற்கும் அம்மா என ஒரு சாதாரண குடும்பம். ஒரு நாள் சாய் பல்லவியின் அப்பா வேலை பார்க்கும் அப்பார்ட்மெண்ட்டில் ஒரு சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக நான்கு வட இந்தியர்களை போலீசார் கைது செய்கிறார்கள். அவர்களுடன் சேர்த்து சாய் பல்லவியின் அப்பாவையும் கைது செய்கிறார்கள்.

தன் அப்பா நிரபராதி என நிரூபிக்க முயற்சி செய்கிறார் சாய் பல்லவி. அவருக்கு துணையாக இந்த வழக்கை வக்கீல் காளி வெங்கட் எடுத்து நடத்துகிறார். இவர்கள் தகுந்த ஆதாரங்களை சேகரித்தார்களா? அவரை நிரபராதி என நிருப்பித்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

கார்கி என்ற கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி மிக எதார்த்தமாக நடித்துள்ளார். அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம். எதையும் எதிர்த்து நிற்கும் தைரியமும், குணமும் இந்த காலத்து பெண்களுக்கு வேண்டும் என்பதை இந்த கார்கி நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

சாய் பல்லவிக்கு உதவியாக வக்கீல் கேரக்டரில் வரும் காளி வெங்கட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் அவரது நடிப்பை பார்க்கும்போது அவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

சாய்பல்லவியின் அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி, நீதிபதியாக வரும் திருநங்கை சுதா, வக்கீலாக ஜெயப்பிரகாஷ் என ஒவ்வொருவரும் அவரவர் கதாப்பாத்திரத்தில் சரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெண்களுக்கு அதிகமாக பாலியல் தொல்லைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது, அவளுக்கு இழைக்கப்படும் அநியாத்துக்கு ஒரு பெண் எப்படி போராடுவாள் என்பதே கார்கி.

ஒவ்வொரு பெண் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய படம் கார்கி.