லவ் டுடே ; விமர்சனம்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி தானே ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள படம் லவ் டுடே.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரதீப்பும், பிராமண பெண்மணியான இவனாவும் காதலிக்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்தும், புரிந்தும் வைத்துக் கொண்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இவர்கள் காதல் விஷயம் இவானாவின் அப்பா சத்யராஜுக்கு தெரிய வர அவர் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்ட ஒரு கண்டிஷன் போடுகிறார்.

பிரதீப்பின் செல்போனை இவானாவிடமும், இவானாவின் செல்போனை பிரதீப்பிடமும் ஒரு நாள் முழுவதும் வைத்துகொள்ள கட்டளையிடுகிறார் சத்யராஜ். இருவரும் செல்போனை மாற்றிக் கொள்கின்றனர்.

பிறகு ஒருவரை பற்றி ஒருவருக்கு முழுமையாக தெரியும் என்று நம்பிக்கொண்டிருந்த இருவரும் செல்போனில் உள்ள விஷயங்களை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகின்றனர். இதையடுத்து அவர்களுக்குள் இருந்த காதல் என்னவானது? இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக தெரியவில்லை என்றாலும், திரைக்கதையின் வழியாக எந்த மாதிரியான கதையையும் சுவாரஸ்யமாக சொல்லிவிடலாம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

இன்றைய இளைஞர்களின் பல்சை சரியாக கணித்தது மட்டுமல்லாமல் அதை சரியாகப் பிடித்து சிறப்பான திரைக்கதை மூலம் ஜனரஞ்சகமான படத்தைக் கொடுத்து படத்தை கரை சேர்த்தது மட்டுமல்லாமல் தியேட்டரில் கை தட்டல்களை அள்ளி இருக்கிறது இந்த லவ் டுடே.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு சிறப்பான திரைக்கதை மூலம் படம் வேகம் எடுத்து ஜெட் போல் பயணித்து நிறைவான கிளைமாக்ஸ் காட்சியோடு முடிவடைந்துள்ளது.

ஹீரோ, ஹீரோயினை மட்டும் காட்டி கதையை நகர்த்தியிருந்தால் படம் சொதப்பியிருக்கும். ஆனால் ரவீணா ரவி, யோகி பாபுவை கொண்டு வந்து கதையின் சுவாரஸ்யத்தை கூட்டிவிட்டார் பிரதீப். பிரதீப்பின் சகோதரி திவ்யாவின்(ரவீணா) வருங்கால கணவராக வரும் யோகி பாபுவின் நடிப்பு அருமை. ரசிகர்களின் விருப்பத்தை உணர்ந்து படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு நடிகராக ரசிகர்களின் கைதட்டல்களை பெறுகிறார் பிரதீப். இவானா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

சத்யராஜுக்கு பெரிதாக வேலை இல்லாவிட்டாலும் தான் வந்து போகும் காட்சிகளில் கவர்கிறார். பிரதீப்பின் அம்மாவாக ராதிகா சரத்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவானாவின் சகோதரியாக நடித்த அக்ஷயா, ரவீணா ரவியின் நடிப்பும் சிறப்பு.

யுவின் ஷங்கர் ராஜாவின் பி.ஜி.எம். கிளைமாக்ஸில் பெரும் பலம்.

லவ் டுடே தாராளமாக பார்க்கலாம்.