மாமனிதன் ; திரை விமர்சனம்


தன் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவம் அவனை எப்படி மாமனிதனாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் படம். இயக்குனர் சீனு ராமசாமி ராதாகிருஷ்ணன் என்னும் மனிதனை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் பண்ணைப்புரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார் விஜய் சேதுபதி. மனைவி காயத்ரி, மகன், மகள் என அழகான குடும்பம். வாழ்க்கை மிக இயல்பாகக் போய்க்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் தன் பிள்ளைகளை, தனியார் பள்ளியில் சேர்த்து நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என கனவுடன் வாழ்ந்து வருகிறார் ராதாகிருஷ்ணன். அதற்காக பணம் சம்பாதிக்க ரியல் எஸ்டேட் தொழில் செய்ய இறங்குகிறார். அதில் இவரும், ஊர் மக்களும் மாதவன் ( ஷாஜி சென் ) என்பவரால் ஏமாற்றப்படுகிறார்.

பணத்தையெல்லாம் சுருட்டி கொண்டு மாதவன் தலைமறைவாக ஊராரின் கோபம் ராதாகிருஷ்ணன் மீது திரும்புகிறது. இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார் ? பிள்ளைகளை படிக்க வைத்தாரா ? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் மாமனிதனின் மீதிக் கதை.

அன்பான கணவனாக, அப்பாவாக விஜய் சேதுபதி ராதகிருஷ்ணனாக வாழ்ந்திருக்கிறார். காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் படங்களில் பார்த்த விஜய்சேதுபதியை இதில் நாம் பார்க்க முடியாது.

விஜய் சேதுபதியின் மனைவியாக வரும் காயத்ரி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் முஸ்லிம் நண்பராக வரும் குரு சோமசுந்தரம், விஜய் சேதுபதி கேரளாவில் சந்திக்கும் கிறிஸ்துவ பெண் மேரி போன்ற கதாப்பாத்திரங்கள் மூலமாக மதத்தை மீறிய சகோதரத்துவம் இந்த மண்ணில் இருக்கிறது என்பதை சீனு ராமசாமி அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்.

இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இவர்களின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் நம்மை உருக வைக்கிறது.

தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை ஒளிப்பதிவாளர் சுகுமார் அப்படியே நம் கண் முன் நிறுத்தியுள்ளார்.

பெயருக்கு ஏற்றார் போலவே மாமனிதன் மாமனிதன் தான்.