ராக்கெட்ரி – நம்பி விளைவு ; திரை விமர்சனம்

நாசா வேலையை புறந்தள்ளி தேசத்திற்காக இஸ்ரோவில் பணியாற்றிய நம்பி நாராயணனின் சொல்லப்படாத கதை தான் ராக்கெட்ரி – நம்பி விளைவு.

1994- ம் ஆண்டு நம் நாட்டின் ராக்கெட் ரகசியங்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கேரள காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் நம்பி நாராயணன். 50 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்தாலும், நான்கு வருட சட்டப்போராட்டத்திற்குப் 1998-ம் ஆண்டு தான் நம்பி குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவரின் வாழ்க்கை கதை தான் இந்த ராக்கெட்ரி – நம்பி விளைவு.

ராக்கெட் தொழிநுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்ட மாதவன், உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் கெமிக்கல் ராக்கெட் புரோபல்ஷன் தொடர்பான ஆராய்ச்சியை முடிக்கிறார். இதைதொடர்ந்து அவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதைப் புறந்தள்ளி அவர் இந்தியா திரும்புகிறார்.

இஸ்ரோவில் சேர்ந்து அவர் இந்திய விண்வெளிக்காக ஆற்றும் பங்கு, அதைத் தொடர்ந்து நடக்கும் சில நிகழ்வுகள், பாதிப்பு என விரிகிறது படத்தின் திரைக்கதை.

மாதவன் நம்பி நாராயணனாக வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இளமையிலிருந்து முதுமை வரையிலான ஒருவரின் வாழ்க்கை பயணத்தின் காலக்கட்டத்தை ஒவ்வொன்றாக தன் உடல்மொழியிலும் கெட்டப்பிலும் காட்சிபடுத்தியதில் மெனக்கெட்டிருக்கிறார்.

நம்பி நாராயணனின் மனைவி மீனா நாராயணனாக சிம்ரன் நடிப்பில் அசத்தியிருக்கிறார். தன் கணவன் மீதுள்ள பொய் குற்றச்சாட்டால் மனமுடைவதும், அதனால் அவமானங்களை எதிர்கொள்வதும் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நம்பி நாராயணன் மனைவியை நம் கண் முன்னே நிறுத்திவிட்டார் சிம்ரன்.

சூர்யா சில நிமிடங்களே வந்தாலும் கவனம் பெறுகிறார். அவர் பேசும் வசனங்கள் ஈர்க்கிறது.

படத்தின் முதல் பாதி சைன்ஸ், இரண்டாம் பாதி செண்டிமெண்ட். இரண்டாம் பாதி மெதுவாக நகர்ந்தாலும், எந்த இடத்திலும் நம்மை நெளிய விடாமல், விறுவிறுப்பாக செல்கிறது.

மாதவனே இந்த படத்தை இயக்கியுள்ளார், அவரின் இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை மக்களிடம் சிறப்பாக சேர்த்திருக்கிறார்.

சாம் சி.எஸ்ன் இசையும், ஒளிப்பதிவாளர் சிர்ஷா ரே-வின் கேமராவும் படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் இந்த ராக்கெட்ரி விண்ணைத் தொட்டுள்ளது.