வசந்த முல்லை ; விமர்சனம்

வேலை அழுத்தம், மல்டி டாஸ்க்கிங், சீக்கிரம் பணம் சேர்க்க வேண்டும் என ஒருவன் தூக்கம் கெட்டு வாழ்க்கை பின்னே ஓடும்போது என்ன ஆகும் என்பதுதான் ‘வசந்தமுல்லை’.

ஐடி துறையில் வேலை பார்க்கும் சிம்ஹா, புராஜெக்ட் ஒன்றை 150 நாட்களுக்குள் முடித்துத்தர தானாக முன்வந்து கமிட் ஆகிறார். இதை வெற்றிகரமாக முடித்துத் தந்தால் நல்ல போஸ்டிங், சம்பளம் கிடைக்கும் என்ற ஆசை அவரை ஒருபக்கம் நெட்டித் தள்ளுகிறது. இன்னொரு பக்கம் வேலை தரும் அழுத்தம் என தூக்கம் தொலைந்து தடுமாறுகிறார்.

அவர் உடல்நலனைக் கருத்தில் கொள்ளும் மனைவி நிலா, அழுது, அடம்பிடித்து ருத்ரனை மலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார். சுற்றுலா முடித்து வரும் வழியில் உள்ள பழைய ஹோட்டலில் தங்குகிறார்கள். அங்கே வில்லேந்திய ஓர் உருவம் அவர்களைத் தாக்கிக் கொல்ல முயல்கிறது. அதனிடமிருந்து தப்பிக்க சிம்ஹா ஆடும் அதிரடி ஆட்டமும் வில்லேந்திய உருவத்துக்குள் ஒளிந்திருப்பது யார் என்கிற பின்னணியுமே கதை.

ஹாலிவுட் பட கதையில் வருவதை போல டைம் லூப்பில் மாட்டிக்கொண்டு திரும்ப திரும்ப ஒரே நிகழ்வுகளை ருத்ரன் எதிர்கொள்கிறார். அப்படி அவர் எதிர்கொள்ளும் அந்த நிகழ்வுகள் அப்படி கால வளையம் கிடையாது என்பதை இறுதி கட்சியின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ருத்ரனாக தூக்கம் தொலைத்து, டைம் லூப்பில் சிக்கி, அதில் இருந்து முடிச்சவிழ்க்க போராடும் கதையின் நாயகனாக, அந்தக் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார் சிம்ஹா.

ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசையும், கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

லூப்பில் சிக்கும் கதையும் அதற்கான காரணமும் அவிழும் இடத்தில், சின்னச் சின்ன ட்விஸ்ட்கள் ஆரம்பத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

ஆக மொத்தத்தில், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தென்படும் அதிகப்படி வேலை அழுத்தம், மல்டி டாஸ்க்கிங் தடுமாற்றங்கள் உள்ளிட்டவற்றால் நேரும் விளைவுகளை, டைம் லூப் களத்தில் வித்தியாசமாக பரிமாறியதில் கவனிக்க வைக்கிறது ‘வசந்த முல்லை’.