லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து வங்கி மோசடியை மையபடுத்தி வங்கி பணியாளரான நாயகன் சத்ய தேவ், மற்றொரு வங்கியில் பணியாற்றும் தனது காதலி பிரியா பவானி சங்கரை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக மோசடி செய்து ரூ.4 லட்சத்தை வேறு ஒருவர் வங்கி கணக்கில் இருந்து எடுக்க, அதே வங்கி கணக்கில் இருக்கும் ரூ.5 கோடியை சத்ய தேவ் பெயரில் மற்றொருவர் மோசடி செய்து எடுத்து விடுகிறார்.
அந்த 5 கோடி ரூபாயால் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் சத்ய தேவ், அதில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட, அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா?, அவரது பெயரை பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்தது யார்? என்பதை வேகமாகவும், விவேகமாகவும் சொல்வது தான் ‘ஜீப்ரா’
தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சத்ய தேவ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது கேரக்டரை உள்வாங்கி கனக்கச்சிதமாக பொருத்தி நடித்திருக்கிறார். அவர் ஆடும் ப்ளேவில் நம்மையும் சேர்ந்து பயணிக்கும்படியாக வைத்து விடுகிறார்
நாயகி பிரியா பவானி சங்கரும் வங்கிப் பணியாளர் வேடமேற்றிருக்கிறார்.கலக்கம் சோகம் மகிழ்ச்சி ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம்.வழக்கம் போல் சிறப்பாகச் செய்திருக்கிறார்
இரண்டாம் நாயகனாக நடித்து மாஸ் காட்டியிருக்கிறார் நடிகர் டாலி தனஞ்செயா. எண்ட்ரீ ஆகும் காட்சிகளிலெல்லாம் தெலுங்கில் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. சத்யராஜ் வழக்கம்போல அசத்தலான நடிப்பு. குறைவான நேரம் திரையில் வந்தாலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மர் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களை ஸ்டைலிஷாகவும் காட்டியிருக்கிறார்
வங்கிகளில் எந்த மாதிரியெல்லாம் மோசடிகள் நடக்கின்றன என்பதை இந்தப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். குறிப்பாக இரண்டாம் பாதியில் நடக்கும் வங்கி கொள்ளை மற்றும் டாலி தனஞ்செயாவின் சவால் ஆகியவை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்க வைக்கிறது அந்தவகையில் பரபரவென்று செல்லும் கதையில், கடைசி 30 நிமிடங்கள் சீட்டின் நுனியில் அமர வைத்து விடுகிறார் இயக்குனர்.