பரோல் விமர்சனம்

வடசென்னை மக்களின் வாழ்க்கை பற்றி சொல்ல வந்துள்ள மற்றொரு படம் பரோல். வன்முறையோடு இரத்தம் தெறிக்க ராவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

நடிகர்கள் : லிங்கா, ஆர்எஸ் கார்த்திக், கல்பிகா, மோனிஷா.

இயக்கம் – துவாரக் ராஜா

தயாரிப்பு ட்ரிப்ர் என்டர்டெயின்மென்ட்

வட சென்னையில் வசிக்கிறார் அம்மா ஜானகி சுரேஷ். இவருக்கு கரிகாலன் (லிங்கா) & கோவலன் (பீச்சாங்கை கார்த்திக்) என்ற இரு மகன்கள். இவர்களுக்கு தந்தை இல்லை.

சிறு வயதில் தன் தாயிடம் தவறாக நடக்க முயன்ற ஒருவரை கொலை செய்து விடுகிறார் அண்ணன் லிங்கா.

எனவே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்கிறார். தனக்காக சிறை சென்ற மூத்த மகன் மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார் அம்மா. இதனால் தனக்கு சரியான பாசம் கிடைக்கவில்லை என ஏங்குகிறார் கார்த்திக்.

ஒரு கட்டத்தில் அம்மா மரணம் அடைய இறுதிச் சடங்கு செய்ய அண்ணனுக்கு பரோல் கிடைக்க போராடுகிறார் தம்பி. இதற்கு முன்பே ஜெயிலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார் லிங்கா. இதனால் பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் லிங்காவை போட்டுத்தள்ள ஒரு கும்பல் காத்திருக்கின்றனர்.

இறுதியாக பரோல் கிடைத்ததா?அம்மாவுக்கு இறுதி சடங்கு செய்தாரா? அந்த ரவுடி கும்பல் என்ன செய்தது? என்பதே படத்தின் மீதிக் கதை.

கார்த்திக் & லிங்கா இருவரும் ஹீரோ & வில்லன் என மாறி மாறி மிரட்டியுள்ளனர். இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

அண்ணனுக்கு காதல் வந்ததும் வீட்டில் அவர் பண்ணும் ரவுசு சூப்பர்.. அது போல அண்ணன் மீது வெறுப்பை காட்டுவதும் ஒரு கட்டத்தில் பாசத்தை காட்டுவதும் என கார்த்தி வெரைட்டி காட்டியிருக்கிறார்.

நாயகனின் காதலிகளாக கல்பிக்கா & மோனிஷா முரளி நடித்துள்ளனர் அதிகப்படியான காட்சிகள் இல்லை என்றாலும் இருவரும் சிறப்பு..

வக்கீலாக வினோதினி. அவரது பணியில் வழக்கம் போல அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு. மகன் கொலைகாரன் என்றாலும் அவன் மீது பாசம் காட்டும் அம்மாவாக ஜானகி சுரேஷ்.

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காட்டப்படும் ஹோமோ செக்ஸ், கொலைகள்.. மற்றும் வன்முறைகள் ஓவராக உள்ளன.

கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். வடசென்னை என்றாலே ரத்தம் மட்டுமே என்பது போல ராவாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல், ஒளிப்பதிவாளர் மகேஷ் திருநாவுக்கரசு, எடிட்டர் முனீஸ் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

வடசென்னை மக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்பதை எத்தனை படங்களில் தான் காட்டப் போகிறார்கள்?

‘பரோல்’ பற்றி தெரியாத பலருக்கும் இந்த படத்தை பார்த்தால் பரோலின் பல விஷயங்கள் புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *