கோப்ரா ; திரை விமர்சனம்

செவென் ஸ்கிரீன் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்துள்ளார்.

கணித முறையில் வித்தியாசமாக தொடர் கொலைகளை செய்கிறார் விக்ரம். அவற்றை விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரி இர்பான் பதான் களமிறங்குகிறார். அப்போது பல சுவாரஸ்யமான விஷயங்கள் அவருக்கு தெரிய வருகிறது. விக்ரம் யார், அவர் ஏன் இந்த கொலைகளை செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.

மூன்று மணி நேரம் படம், ஆனால் விக்ரமின் நடிப்பு நம்மை கட்டிபோட்டு விடுகிறது. ட்ரைலரில் விக்ரம் விதவிதமான கெட்டப்பில் வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அந்த காட்சிகளை படமாக்கிய விதத்தில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். முதல் பாதி வேகமாக கடந்தாலும், இரண்டாம் பாதி சற்று மெதுவாக செல்வதே படத்திற்கு மைனஸ்.

விக்ரம் அவரின் கதாப்பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி, ரோபோ ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார் இவர்களில் யாருடைய கதாப்பாத்திரமும் வலுவாக எழுதப்படவில்லை. இவர்களில் மீனாட்சிக்கு மட்டும் நல்ல கதாப்பாத்திரம்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு இது முதல் படம், முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சரியாக நடித்திருக்கிறார். வில்லனாக வரும் ரோஷன் மேத்யூ நடிப்பில் ஒ.கே என்றாலும், அவரை பார்த்தால் வில்லன் என்று பயப்படும்படி இல்லை.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு பலம். ஆதிரா பாடலை தவிர வேறு எந்த பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன.

முதலில் சொன்னது போலவே இது விக்ரமின் ஒன் மேன் ஷோ. அவருக்காக பார்க்கலாம். நிச்சயம் விக்ரம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.