காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்

இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காலங்களில் அவள் வசந்தம். இந்த படத்தில் கௌஷிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோஷினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அறம் என்டர்டைன்மெண்ட், ஸ்ரீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசை அமைத்திருக்கிறார்.

படத்தில் ஷ்யாம் என்ற கதாபாத்திரத்தில் கௌசிக் ராம் நடித்திருக்கிறார். இவர் சினிமா படங்களில் வருவது போன்றே நிஜ வாழ்க்கையிலும் காதல் வரும் என்று இருக்கிறார். ஷ்யாம் உடைய வெள்ளந்தி குணத்தை பார்த்து அஞ்சலி நாயர் திருமணம் செய்து கொள்கிறார். சினிமாவில் வருவதைப் போலவே நிஜ வாழ்க்கையில் தங்களுடைய திருமண வாழ்க்கையை நினைத்து வாழ நினைக்கிறார் ஷ்யாம். ஆனால், எதார்த்த வாழ்க்கை இதுதான் என்று புரிய வைக்கிறார் அஞ்சலி நாயர்.

இதனால் இருவருக்குள் ஈகோ, சண்டை என பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் அஞ்சலி நாயர் உலகின் எதார்த்தத்தை தன் கணவருக்கு புரிய வைத்தாரா? ஷ்யாம் சினிமாவிற்கும், நிஜ வாழ்விற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டாரா? இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.

புதுமுக நாயகன் என்று சொல்ல முடியாதபடி ‘ஷ்யாம்’ கதாபாத்திரத்தில் ஸ்டைலாகவும் துறுதுறுப்புடனும் நடித்து அறிமுகப் படத்திலேயே பார்வையாளரின் மனதைக் கொள்ளையடித்துச் செல்கிறார் கௌசிக் ராம். காதலியை கைவிடவும் முடியாமல் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்கிற உண்மையைச் சொல்லவும் முடியாமல் விலகியோடும் இடத்தில் கௌசிக்கின் நடிப்பு கூடுதல் நேர்த்தி.

‘நெடுநெல் வாடை’, ‘டாணாக்காரன்’ படங்களின் மூலம் கவனிக்க வைத்திருந்தாலும் ராதே கதாபாத்திரத்தின் ஆன்மாவை அட்டகாசமாக அசத்தியிருக்கிறார் அஞ்சலி நாயர். நாயகனின் அப்பாவாக வரும் மேத்யூ, அம்மாவாக வரும் ஜெயா சுவாமிநாதன் ஆகியோரும் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ராதேவுக்கு அடுத்த இடத்தில் அனுராதாவாக வரும் ஹிரோஷினி, கிடைத்த சின்ன இடைவெளியில் தன் திறமையைக் காட்டிச் சென்றுவிடுகிறார்.

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு இந்தப் படத்தின் முதுகெலும்பு என்றே சொல்ல வேண்டும். கதைக்கும் களத்துக்குமான இசையை வழங்கியிருக்கும் ஹரி எஸ்.ஆரின் இசை, ஃபாண்டஸியை விரும்பும் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தும் களத்துக்கான எஸ்.கேயின் கலை இயக்கம் என தொழில்நுட்ப ரீதியாகவும் படம் வசீகரிக்கிறது.

மொத்தத்தில் இளைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.