படவேட்டு – விமர்சனம்

மனதளவில் அதிர்ச்சியிலிருக்கும் ரவி (நிவின் பாலி) எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருக்கிறார். மழை வந்தால் வீடு ஒழுகுவதால் ரவியை அவரது அம்மா திட்டுகிறார். இவர்களது ஏழ்மையை பயன்படுத்தும் அரசியல்வாதி ஒருவர் ரவியின் வீட்டை புதுப்பித்து தந்து வீட்டு எதிரே ஸ்பான்சர் செய்து புதுப்பித்தது என்று கட்யின் கல்வெட்டு நடுகிறார்.

வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் ரவியை ஊரே ஸ்பான்சர் ரவி என கிண்டல் செய்கிறது. அதே அரசியல் கூட்டம் விவசாயிகளின் நிலங்களையும் அபகரிக்க திட்டமிடுகிறது. இதில் கோபம் அடையும் ரவி, கட்சியினர் தன் வீட்டுமுன் வைத்திருந்த கல்வெட்டை உடைத்து நொறுக்குகிறான். மேலும் விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதியின் முகத்திரையை கிழித்து கிராமத்து மக்களின் நிலங்களை எப்படி மீட்டு தருகிறான் என்பதே படவேட்டு பட கிளைமாக்ஸ்.

என்ன இது? நிவின்பாலி இப்படி ஒரு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாரே? என்று நினைக்க வைக்கிறது முக்கால்வாசிப்படம். இறுதியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் எல்லாவற்றையும் நேர்மறையாக்கிவிடுகிறது. அமைதியாக அதேசமயம் ஆழமான அவருடைய நடிப்பு படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.

அரசியல்கட்சித் தலைவராக வருகிறார் ஷம்மிதிலகன். அவருடைய அப்பா திலகனுக்கு இணையாக நடிப்பில் மிரட்டுகிறார்.

தீபக் மேனனின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

லிஜுகிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கிறார்.

பரப்புரை தொனியில்லாமல் ஆதிக்கச் சக்திகள் எப்படி இயற்கையையும் மண்வளத்தையும் கொள்ளையடிக்கின்றன என்பதை ஷம்மிதிலகனின் தொழிலை வைத்துச் சொல்லியிருக்கிறார்.

படவெட்டு என்றால் போர் என்று பொருள். அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக நிவின்பாலி நிகழ்த்தும் போர்தான் இப்படம்.