கப்ஜா ; விமர்சனம்

கே.ஜி.எப், காந்தாரா, என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த கன்னட திரையுலகில் இருந்து அடுத்ததாக வெளியாகி உள்ள படம் கப்ஜா. உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா சரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

கப்ஜா கதையானது 1945 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடங்கி, பின்னர் 1971 ஆம் ஆண்டு காலத்தில் நடைபெறும் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரரின் மகனான உபேந்திரா விமான படையில் பயிற்சி முடித்து விட்டு பணிக்கு செல்வதற்கு முன் சொந்த ஊருக்கு வருகிறார். அவர் வாழும் அமராபுரம் தொடங்கி பல இடங்களிலும் சுதந்திர போராட்டத்திற்கு பின் பகதூர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் உள்ளது. இதற்கிடையில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

பகதூர் சாம்ராஜ்யத்துக்கு அமராபுரம் தொகுதியில் கலீல் சிம்ம சொப்பனமாக விளங்குகிறான். தேர்தலில் கலீல் மகனை களம் இறக்க திட்டமிடப்பட்டு வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படுகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக உபேந்திரா அண்ணனால் கலீல் மகன் கொல்லப்பகிறான். இதனால் ஆவேசமடையும் கலீல் பழிக்கு பழியாக உபேந்திரா அண்ணனை கொல்கிறான். தன் அண்ணன் மரணத்திற்கு பழி தீர்க்க களம் இறங்கும் சுதந்திர போராட்ட வீரரின் மகனான உபேந்திரா எப்படி கேங்ஸ்டர் கிங் ஆக மாறுகிறார் என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார்கள்.

சாதுவாக இருந்து கேங்ஸ்டராக மாறும் உபேந்திராவின் நடிப்பு பிரமாதம், ஸ்ரேயா அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீசாக வரும் சுதீப், அடுத்த பாகத்திற்கு லீட் கொடுத்த சிவராஜ்குமார் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கேங்ஸ்டர் கதை என்பதால் அடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறது. ரவி பஸ்ரூரின் இசையும், ஷெட்டியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் கப்ஜா தாராளமாக பார்க்கலாம்.