பல பெண்களால் நிராகரிக்கப்பட்ட நாயகன் விக்ரம் பிரபுவிற்கு கோபிச்செட்டிப்பாளையம் ஊரில் ஒரு பெண் கிடைக்கிறது. அந்தப் பெண்ணை நிச்சயம் செய்வதற்காக மதுரையிலிருந்து விக்ரம் பிரபு குடும்பம் கோபிச்செட்டிப்பாளையம் செல்கிறது. இவர்கள் போய்ச்சேர்ந்த நேரம் கொரோனா லாக்டவுன் வருகிறது. மணப்பெண்ணும் இன்னொருவரோடு ஓடிப்போகிறார். அதன்பின் விக்ரம் பிரபு கல்யாணம் என்னானது? என்பதற்கு மீதிப்படம் பதில் சொல்கிறது.
நாயகன் விக்ரம் பிரபு. தனக்கான கதாபாத்திரத்தை மனநிறைவோடு செய்து முடித்திருக்கிறார். நாயகியுடன் பேசத் தயங்குவது, வெட்கப்படுவது, திருமணத்திற்காக ஏங்குவது என பல இடங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருந்தார்.
நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா பட் சில காட்சிகளில் அழகாக இருக்கிறார், சில காட்சிகளில் அதிகம் வயதுள்ளவர் போல் தெரிகிறார். இருந்தாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகியின் தங்கை ராதாவாக மீனாட்சி தினேஷ் நடித்திருக்கிறார். அக்காவின் கதாபாத்திரத்துக்கு நேர்மாறாக நிறையப் பேசுகிற, துறுதுறுவென கலகலப்பாக இருக்கிற கதாபாத்திரத்தை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
மாமாவாக நடித்திருக்கும் அருள்தாஸுக்கு மிகுந்த நற்பெயர் கொடுக்கிற வேடம்.அதில் நன்றாக நடித்து மேலும் நற்பெயர் பெறுகிறார். ரமேஷ்திலக், கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் பலமாக அமைந்திருக்கிறார்கள்.சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் வந்து போகிறார்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறது. பரத் விக்ரமனின் படத்தொகுப்பிலும் குறையில்லை.
90’ஸ் கிட்ஸ்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் சண்முக பிரியன் காதல் கதையை, கலகலப்பான குடும்ப கதையாக இயக்கியிருக்கிறார். காதல் கொஞ்சமாக இருந்தாலும், கலகலப்பும், பொழுதுபோக்கும் அதிகமாகவே இருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸில் விக்ரம் பிரபு பேசும் வசனங்கள் பலம். காமெடியும் சற்று கைகொடுத்திருக்கிறது.
.
.