உடல் முழுவதும் கருமை நிறம் கொண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டு ஒரு இளம்பெண்ணின் உடலானது குப்பைத் தொட்டியில் இருந்து எடுக்கப்படுகிறது. வழக்கை விசாரிக்கிறது தமிழக காவல்துறை. இந்த கொலை செய்தியை மும்பையில் இருந்து செய்தித்தாளில் பார்க்கும் போலீஸ் உயரதிகாரி விஜய் ஆண்டனி, சென்னைக்கு வந்த இந்த வழக்கை விசாரிக்க வருகிறார். அவர் எதற்காக இந்த வழக்கில் ஆர்வம் காட்டுகிறார் ? கொலையாளியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது மீதிக்கதை.
விஜய் ஆண்டனி ஒரு விசாரணை அதிகாரியாக, மகளின் இழப்பால் பாதிக்கப்பட்ட தந்தையாக, அவரது தனித்துவமான தோற்றத்தில் முதல் பாதியில் சஸ்பென்ஸ{டன் படைக்கப்பட்ட அம்சம் நன்றாக வேலை செய்கிறது. சோகத்தையும், விசாரிக்க வேகம் காட்டும் விதமும் படத்திற்கு ப்ளஸ். படம் முழுக்க, முகம் உட்பட உடம்பின் சரிபாதியில் கருப்பு நிறம் தாங்கி வரும் அவரது தோற்றம் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.
இரண்டாவது நாயகனாக, நீச்சல் வீரர் தமிழறிவாக அறிமுக நடிகர் அஜய் தீஷன் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த நடிகர் போல் தன் கதாபாத்திரத்தில் அழுத்தமாகவும், அதே நேரத்தில் அசல்டாகவும், திறமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் உதவியாளர் வேடத்தில் பிரிகிடா சாகா சிறப்பாக நடித்தார். தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்தனர்.. கொலைக்காரனால் துரத்தப்படுவதாகக் காட்டப்படும் வெண்ணிலா எனும் பாத்திரத்தில் நடித்துள்ள கனிமொழி சிறப்பாக .நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை திரைக்கதையில் ஏற்படும் சில தொய்வுகளை கூட பார்வையாளர்கள் மறந்து கதையோடு பயணிக்க வைக்கும் அளவுக்கு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.. ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவின் கேமரா கிரைம் திரில்லர் பாணிக்கு ஏற்ப பணித்திருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லா க்ரைம் த்ரில்லர்களும் ஒரே மாதிரியாகத் தொடங்குகின்றன. இருப்பினும், சில நிமிடங்களில் இயக்குனர் இதை வித்தியாசமாக விவரிக்கிறார். தேவைக்கு மேல் நீளும் காட்சிகள் , பில்டப் பெரிதாக இருந்து அதை அடுத்து வரும் விஷயம் சாதாரணமாக இருப்பது படத்திற்கு பலவீனம். ஆனால் சற்றும் எதிர்பாராத திடீர் க்ளைமாக்ஸில் திருப்பங்களை தந்து திரைக்கதையை திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.