News

கண்ணப்பா ; விமர்சனம்


மலை பிரதேசத்தில் கிராமத்தின் (பட்டி) தலைவராக, பழங்குடி மக்களை வழி நடத்துகிறார் சரத்குமார். ஆனால் சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தி இல்லாத நபராக வளரும் அவரது மகன் திண்ணன் (விஷ்ணு மஞ்சு) பெரும் வில் வித்தை வீரனாக, தங்கள் இனத்தை காப்பவனாக, நாத்திகனாக வளர்கிறான். அந்த. இந்நிலையில் மகாதேவ சாஸ்திரிகள் (மோகன் பாபு) நெடுங்காலமாக மற்ற வர்கள் அறியாத வண்ணம் பூஜை செய்து பயபக்தியுடன் வாயு லிங்கத்தை யார் கண்ணிலும் படாதவாறு பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகிறார்.

வாயு லிங்கத்தின் மகிமையை கேள்விப்பட்டு பெரும் படைகள் வைத்திருக்கும் அரக்க குணம் நிறைந்த அர்பித் ரங்கா தன் படை ஆட்களை அனுப்பி வாயு லிங்கத்தை களவாட நினைக்கும் நேரத்தில் திண்ணாவிடம் எதிர்பாராத விதமாக சண்டை ஏற்பட அர்பித் ரங்காவின் ஆட்கள் அடிபட்டு திரும்பி செல்கின்றனர். இதனால் கோபமாகும் அர்பித் ரங்கா திண்ணன் வசிக்கும் பட்டியை அ.ழிக்க படையெடுத்து வருகிறான்.

இதனிடையே சிவனை வழிபடும் நெமலி (ப்ரீத்தி முகுந்தன்) மீது திண்ணாவிற்கு காதல் ஏற்பட, அதனால் பழங்குடி மக்களிடையே மோதல் எற்படுகிறது. போருக்கு ஒத்துழைக்காத மற்ற மக்களின் விருப்பப்படி காதல் பிரச்னை காரணமாக சரத்குமார் தனது மகனை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்..

இந்த நேரத்தில் அர்பித் ரங்கா படையெடுத்து வர சரத்குமார் மற்ற பட்டி பழங்குடி மக்களை காப்பாற்றிவிட்டு உயிரை துறக்கிறார். அப்பாவின் இறப்பை கேள்விப்படும் திண்ணா அர்பித் ரங்காவின் மொத்த படையை தானே எதிர்கொள்ள தயாராகிறான். இறுதியில் யார் வென்றது என்பதுடன் நாத்திகனான திண்ணன் ஆத்திகனாக மாறினாரா ? திண்ணன் கண்ணப்பனாக மாறியது எப்படி என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, திண்ணன் மற்றும் கண்ணப்பர் உருவங்களை தனது நடிப்பு மூலம் நம் கண்முன் நிறுத்துகிறார். அவரது அறிமுகக் காட்சி அபாரம் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்திருகிறார்.

நாயகி பிரீத்தி முகுந்தன் தோற்றம் காதல் பாடல் காட்சிகளில் கவர்ச்சி ஆவேச நடிப்பு என்று நடிப்பை வழங்கி இருக்கிறார்.

கிராத்தா என்ற வேடர் குல வீரராக நடித்திருக்கும் மோகன்லாலின் திரை இருப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர் பேசும் வசனங்கள் அனைத்தும், அகந்தையில் திரியும் மனிதர்களுக்கு அறிவுரைகள்.

ருத்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபாஸ், திரையரங்குகளில் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைப்பது உறுதி. அவர் வரும் ஒவ்வொரு ஃபிரேம்களும் ஆன்மீகவாதிகளுக்கு மெய்சிலிர்க்க வைப்பதோடு, ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதத்தில் இருக்கிறது.

சிவனாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார் மற்றும் பார்வதியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால் பொருத்தமான தேர்வு.

சிவ பக்த சாஸ்திரிகளாக அழுத்தமான வசன உச்சரிப்பும் கம்பீரம் நிறைந்த பார்வையுடன் மோகன் பாபு அதகளம் செய்துள்ளார். அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகுபாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, சுரேகா வாணி, கௌஷல், ஆதுர்ஸ் ரகு ஆகியோர் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஷெல்டன் ஷாவின் கேமரா நியூசிலாந்தின் இயற்கை அழகையும் ஒரு கதாபாத்திரமாக திரைக்கதையோடு பயணிக்க வைத்திருக்கிறது. எது உண்மை, எது வி.எப்.எக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாதபடி நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஷெல்டன் ஷாவ்.

ஸ்டீபன் தேவாஸி இசையும் பின்னணி இசையும் ஆரம்பம் முதல் இறுதி வரை பக்தியுடன் பயணிக்க வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதுவரை திரையில் சொல்லப்பட்ட கண்ணப்பர் கதையை கதை, திரைக்கதை ஆசிரியராக புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் விஷ்ணு மஞ்சு, திரை மொழியில் பிரமாண்டமாக சொல்வதற்கான அம்சங்களோடு கதையை கையாண்டிருந்தாலும், கண்ணப்பரின் பக்தியின் ஆழத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

கண்ணப்பா, பிரம்மாண்ட காட்சிகளின் ஆடம்பரத்துடன் சாதி, மத பேதமில்லாத தூய்மையான பக்தியை இந்தியா முழுவதும் உள்ள பல முக்கிய முன்னணி நட்சத்திரங்களை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் அயராத உழைப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இயக்கியிருக்கிறார் முகேஷ் குமார் சிங்..

.