Reviews

டி.என்.ஏ ; விமர்சனம்


காதலில் தோல்வியடைந்த நாயகன் அதர்வா போதைக்கு உள்ளாகி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் அதர்வாவை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார்கள். இதனிடையே சற்றே மனநிலை பிரச்னை உடைய நாயகி நிமிஷா சஜயனுக்கு சரியாக திருமண வரன் அமையாமல் இருக்கிறது. நிமிஷா விஜயனை அதர்வாவிற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அழகான ஆண்குழந்தையை பிரசவிக்கிறார் நிமிஷா. பிறக்கிறது இவர்களுக்கு. குழந்தை பிறந்ததும் இதுதான் உங்கள் குழந்தை என்று நிமிஷாவிடம் காண்பிக்கிறார் மருத்துவர். ஆனால் குழந்தையை கையில் ஏந்தும் நிமிஷா, இது என்னுடைய குழந்தை இல்லை என்று மருத்துவமனையில் கத்தி கூச்சலிடுகிறார் நிமிஷா.

ஆனால், மருத்துவமனை ஆவணங்கள் அனைத்தும் அது நிமிஷா குழந்தை தான் என்பதை உறுதிப்படுத்த, நிமிஷா மட்டும் தனது குழந்தை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கிறார். மனைவி சொல்வதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அதர்வா, தனது குழந்தையை மீட்டாரா? குழந்தை கடத்தலின் பின்னணி என்ன? என்பது தான் மீதிக்கதை..
.
மதுவுக்கு அடிமையான இளைஞர் வேடம், பொறுப்பான கணவன் மற்றும் தந்தை வேடத்துக்கு ஏற்ப மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார் அதர்வா. தனது முழு நடிப்புத்திறனை வெளிக்கொண்டு வந்திருக்கும் இப்படத்தின் மூலம் தன் திறமையை நிரூபித்து ஜெயித்திருக்கிறார் நடிகர் அதர்வா.

நிமிஷா சஜயன் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். ஆகச்சிறந்த நடிப்பு அவரது நடிப்பு. சில இடங்களில் ரசிகர்கள் கண்களில் நீர்த்துளிகள் துளிர்த்தால் அதற்கு நிமிஷாவே காரணம்.

எஸ்.ஐ.யாக வரும் பாலாஜி சக்திவேல், உதவ வேண்டும் என்ற மனிதநேயம் கொண்ட கதாபாத்திரம். அதைச் சிறப்பாகச் செய்திருப்பவர், ‘போனில் நொடிகளை ஓடவிடும்’ விசாரணைக் காட்சிகளில் கைதட்டல்களை வாங்குகிறார். இவர்கள்தவிர, பாட்டியாக வரும் சாத்தூர் விஜயலட்சுமி, ரமேஷ் திலக், சேத்தன், விஜி ஆகியோரின் பங்களிப்பும் நிறைவு.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. பார்த்திபனின் ஒளிப்பதிவு நேர்த்தி. இரவு நேர காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது.

குழந்தை கடத்தலை மையமாக வைத்து மருத்துவ பின்னணி கலந்த திரைக்கதைக்கு பொறுத்தமான படத்தின் டைட்டிலுடன் அனைத்து காட்சிகளையும் பரபரப்பாக அதிஷாவுடன் இணைந்து எழுதி இயக்கியுள்ளார் நெல்சன் வெங்கடேசன். கூடவே சமுதாய அக்கறையோடு குழந்தைகள் விசயத்தில் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி அதிர்ச்சியும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார்…