மைக்கேல் ; விமர்சனம்

தமிழில் இதற்கு முன்னதாக `புரியாத புதிர்` மற்றும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்` ஆகிய திரைப்படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் மாநகரம் பட நாயகன் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மைக்கேல்.

90களின் காலகட்டங்களில் நடக்கும் ஒரு கேங்கஸ்டர் கதைதான் `மைக்கேல்` திரைப்படத்தின் மையக்கரு. கேங்க்ஸ்டராக வேண்டுமென்ற லட்சியத்தோடு மும்பைக்கு வருகிறார் கதாநாயகன் மைக்கேல் (சந்தீப் கிஷான்). அங்கு மும்பையின் மிகப்பெரிய `டான்` ஆக விளங்கும் குருவிற்கு (கௌதம் வாசுதேவ் மேனன்) ஏற்படும் ஆபத்திலிருந்து எதிர்பாராதவிதமாக அவரை காப்பாற்றுகிறார் கதாநாயகன்.

அதன் பின் குருவுடன் இணைகிறார் மைக்கேல். குருவின் மொத்தம் நம்பிக்கையையும் பெறும் மைக்கேலிடம் பின்னாளில் சில பொறுப்புகளும் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின் டெல்லிக்கு செல்லும் மைக்கேல் அங்கு குருவின் மகளான கதாநாயகி தீராவுடன் (திவ்யான்ஷா) காதலில் விழுகிறார். அதன் பின் கதாநாயகிக்கு ஏற்படும் சில பிரச்சனைகள், கதாநாயகனின் ஆக்‌ஷன் காட்சிகள் என படம் நீள்கிறது.

இடையில் விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் வருகின்றன. கதாநாயகியை பிரச்சனையில் இருந்து மைக்கேல் காப்பாற்றினாரா? விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் படத்தில் என்ன செய்கிறது? தான் கேங்க்ஸ்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வந்த மைக்கேலின் கனவு நிறைவேறியதா? என்பதுதான் மைக்கேல் திரைப்படம்.

சந்தீப் கிஷனுக்கு கே.ஜி.எப் போன்று படம் செய்ய வேண்டும் என்ற ஆசையா இல்லை இயக்குனருக்கு கே.ஜி.எப் போல் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையா என தெரியவில்லை. கே.ஜி.எப் படத்திற்கு சவால் விடும் அளவுக்கு ஒரு படம் தான் மைக்கேல்.

இப்படத்தில் கதாநாயகனாக வரும் சந்தீப் கிஷான் தன்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. கவுதம் மேனன், விஜய் சேதுபதி, வரலட்சுமி ஆகியோர் தங்களது கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ்-ஸின் இசையும், கிரண் கௌசிக்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.

ஆக்‌ஷன் மற்றும் ரொமாண்டிக் காட்சிகள் நிறைந்து காணப்படும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுப்போக்கு திரைப்படமாக வெளியாகியுள்ளது.