ரன் பேபி ரன் ; விமர்சனம்

நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்வி படிக்க வரும் ஆதரவற்றவர்களை அங்கிருந்து துரத்தி அவர்களின் இடத்தை பெரும் பணம் படைத்தவர்களுக்கு விற்பனை செய்யும் அரசியலை அடிப்படையாக கொண்டு க்ரைம் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது ரன் பேபி ரன்.

வங்கியில் வேலை பார்க்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு இஷா தல்வாருடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஒரு நாள் எங்கிருந்தோ தப்பித்து பாலாஜியின் காரில் ஏறி உதவி கேட்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், சில மணி நேரம் அவருடைய பிளாட்டில் தங்க அனுமதி வாங்கி விடுகிறார். ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் பாலாஜி, அப்படியே தூங்கிவிடுகிறார். விடிந்த பின் பார்த்தால் ஐஸ்வர்யா பிணமாக இருக்கிறார். அதிர்ச்சி அடையும் பாலாஜி சடலத்தை அங்கிருந்து அப்புரப்படுத்துகிறார். இதனால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே படம்.

எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் என ஜாலியான கதாப்பாத்திரங்களில் நடித்த பாலாஜி இதில் தன் ரூட்டை மாற்றியுள்ளார். கலகலப்பாக நாம் பார்த்த பாலாஜியை சீரியசான ரோலில் பார்ப்பதற்கு வித்தியசமாக உள்ளது, இருந்தாலும் அவரது கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருத்தி வெங்கட் என மூன்று கதாநாயகிகள் உள்ளனர். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ராதிகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவரும் அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

முதல்பாதியில் பிரச்சனையில் இருந்து தப்பிக்க நினைக்கும் பாலாஜி, இரண்டாம் பாதியில் கொலைகாரனை கண்டுபிடிக்க முயல்கிறார். அந்தவகையில் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.

சாம்.சி.எஸ்.ஸின் பின்னணி இசையும், யுவாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.

ஒரு மெடிக்கல் காலேஜின் குற்றப் பின்னணி தான் படத்தின் கரு, அதை த்ரில்லர் படமாக அழகாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஜியேன் கிருஷ்ணக்குமார்.

மொத்தத்தில் ரன் பேபி ரன் பார்க்க வேண்டிய த்ரில்லர் படம்.