பட்டத்து அரசன் ; விமர்சனம்

கபடியின் வழியே ஒரு குடும்பக்கதையை கிராமத்து வாசனையுடன் சொல்லியிருக்கும் படம் ‘பட்டத்து அரசன்’. காளையார் கோயில் எனும் கிராமத்தின் அசுர கபடி ஆட்டக்காரர் பொத்தாரி (ராஜ்கிரண்). அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு ஊருக்காக கபடி போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளை குவித்தவர்.

அவருக்குப் பிறகு அவரது மகன், பேரன் என 40-50 ஆண்டுகளாக ஊருக்காக கபடி விளையாடி பெருமை சேர்த்தவர்கள். இப்படியான சூழலில், ராஜ்கிரண் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்துவிட்டதாக அவர் மீது பழி விழ, அதனை துடைக்கும் பொறுப்பை ஏற்று களமிறங்குகிறார் சின்னதுரை (அதர்வா).

இறுதியில் அந்தக் குடும்பத்தின் மீதான பழியை அவர் துடைத்தாரா, இல்லையா என்பதுடன், ஒதுங்கியிருந்த தனது தாத்தா குடும்பத்துடன் அவர் மீண்டும் எப்படி ஒன்று சேர்ந்தார் என்பதுதான் ‘பட்டத்து அரசன்’
கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு அழகாக பொருந்துகிறார் அதர்வா. வெறுப்பு காட்டும் குடும்பத்தினர் மீது பாசம், சண்டை, காதல் என அனைத்து ஏரியாக்களிலும் ஏறி விளையாடியுள்ள அதர்வாவின் நடிப்பு அபாரமாக உள்ளது.

ராஜ்கிரண் நடிக்கவே வேண்டாம் என்பது மாதிரி கண்கள், புருவம், தாடி, மீசை, நடை, உடை என எல்லாமே அவருடைய கதாபாத்திரத்தில் அழுத்தமாக வெளிப்பட்டு உள்ளது.

சிங்கம்புலி வழக்கமான பாணியில் சிரிக்க வைக்கிறார். நாயகி ஆஷிகா ரங்கநாத்துக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் நடிப்பில் குறை இல்லை. ராதிகா, ஜெயபிரகாஷ், துரை சுதாகர், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.குமார், பாலசரவணன், சத்ரு, ரவிகாளே, ராஜ் ஐயப்பன் என அனைவருமே கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் கூடுதல் பலம்.

அன்பு, பாசம், உறவுகள், சச்சரவு, மோதல் என்று திரைக்கதையை கிராமிய வாசனையோடு விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் சற்குணம்.