Reviews

திருக்குறள் ; விமர்சனம்


கலைச்சோழன், தனலட்சுமி, குணாபாபு, பாடினி குமார், சுகன்யா, சந்துரு,ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரர், கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், அருவி ஆனந்தன், இந்துமதி, கார்த்தி, யாசர், ஹரிதா ஸ்ரீபிறக்கும் உயிர்களுக்கெல்லாம் எந்தவித தீங்கும் எண்ணாத ஒருவராக வருகிறார் வள்ளுவன் (கலைச்சோழன்). இவரது மனைவியாக வருபவர் வாசுகி (தனலட்சுமி).

ஒரு அழகிய குடும்பமாய், தனது நூலை எழுதி முடிக்கும் வேலையில் இருந்து வருகிறார் வள்ளுவன். அதேசமயம், மாணாக்கர்களுக்கு வகுப்பும் எடுத்து வரும் ஒரு ஆசானாகவும் இருக்கிறார் வள்ளுவன்.

இந்த நிலையில், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு அறியணை ஏறிய ராஜா ஒருவரின் ராஜ்ஜியத்திற்கும் வள்ளுவன் வாழும் ராஜ்ஜியத்திற்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகிறது போரையும், உயிர் பலிகளையும் விரும்பாத திருவள்ளுவர் மக்களின் நலனுக்காக போர் மூலம் கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சி தருபவர்களை அரியணையில் அமர வைப்பதற்கான பணிகளிலும் ஈடுபடுகிறார்.

ஒரு பக்கம் தனது புத்தகப் பணி மறுபக்கம் மக்களுக்கு நல்லாட்சி அமைவதற்கான யுத்த பணி என்று பயணிக்கத் தொடங்கும் திருவள்ளுவர் தனது புத்தகமான திருக்குறளை அரங்கேற்றினாரா?, போர் அவர் நினைத்து போல் மக்களுக்கு சாதகமாக அமைந்ததா? என்பதை மனதுக்கு நெருக்கமாகவும், அழகியலோடும் சொல்வதே ‘திருக்குறள்’.

திருவள்ளுவராக நடித்திருக்கும் கலைச்சோழனின் பல்வேறு சூழல்களுக்கு ஏற்ற நடிப்பு அலாதியானது. அவர் தன் குறள்களில் எந்தெந்த விஷயங்களை எல்லாம் தொட்டுக் காட்டினாரோ அந்தந்த நிலைகளில் எல்லாம் அவர் வாழ்க்கையிலும் நடந்து கொண்டதை விவரிக்கிறது திரைக்கதை.

திருவள்ளுவரின் மனைவி வாசுகியாக நடித்திருக்கும் தனலட்சுமி, புதுமுகம் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு அளவாக நடித்திருக்கிறார்.நல்ல வரவேற்பையும் பெறுகிறார்.

புரட்சிப்படைத் தலைவர் பரிதியாக குணாபாபு சுறுசுறுப்பாகவும், அவரது காதலி பவளக்கொடியாக பாடினி குமார் துருதுருவெனவும் நடிப்பை வெளிப்படுத்தி மனதை ஈர்க்கிறார்கள். இருவரையும் இறுதியில் ‘நடுகல்’லாகப் பார்க்கும்போது கண்கள் கலங்கிவிட்டன.

புலவர் பெருந் தலைச்சாத்தனராக நடித்திருக்கும் கொட்டாச்சி சில காட்சிகள் என்றாலும் நம் மனதை கவர்ந்திருக்கிறார். குமணனாக நடித்திருக்கும் அரவிந்த ஆண்டவன், பாணனாக நடித்திருக்கும் கார்த்தி, பரிதியின் தோழனாக நடித்திருக்கும் யாசர் என்று அத்தனை நடிகர்களுமே மிகச் சிறப்பாக தமிழில் பேசி நடித்துள்ளனர்.

மாட்டத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுகன்யா மற்றும் சங்கு மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்துரு ஜோடி கலப்பு திருமணங்கள் சங்கக்காலங்களிலேயே இருந்தது என்றும், அதனை ஆதரிப்பது தான் நம் கலாச்சாரமும், இலக்கியமும் என்பதை அழகியலோடு உணர்த்தியிருக்கிறார்கள்

இளையராஜாவின் இசை மற்றும் பாடல் வரிகள் சங்ககாலத்திற்கு ஏற்ப இருப்பதோடு, திரும்ப திரும்ப கேட்க வைத்து ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை கதைக்களம் மற்றும் காட்சிகளின் அழகியலுக்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கிறது.

தனக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தன்னுடைய பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய்.

காமராஜ், காந்தி ஆகியோர் வாழ்க்கைக்கதைகளைப் படமாக்கிய பாலகிருஷ்ணன்,திருவள்ளுவரையும் திரையில் திருத்தமாய் வடித்திருக்கிறார். தமிழ்நாடு அரசு இப்படத்தை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், அனைத்துக் கல்லூரிகளிலும் இலவசமாகத் திரையிட ஏற்பாடு செய்தால், மாணவ மாணவிகள் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் பெருமையை அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.