Reviews

குட் டே ; விமர்சனம்


திருப்பூரின் ஜவுளித் தொழிற்சாலையில், சூப்பர்வைசராக இருக்கிறார் பிருத்விராஜ் ராமலிங்கம். அவரது மோசமான ஒரு நாளில், பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், தொலைபேசியில் மனைவியின் வசைபாடுதல் ஆகியவை மன அழுத்ததுக்குக் கொண்டு செல்ல தனது அறையில் தனியாக மது அருந்துகிறார்.

அதன்பின்பு போதையில், வீட்டு உரிமையாளரிடம் சண்டை, முன்னாள் காதலிக்கு தொலைபேசியில் அழைப்பு என அடுக்கடுக்காக அலப்பறைகளைக் கூட்டுகிறார் சாந்தகுமார். இதன்பின்னர், அந்த ஓர் இரவில் நடக்கும் நிகழ்வுகள், அவர் வாழ்வில் என்ன மாற்றத்தை நிகழ்த்துகிறது என்பதே ‘குட் டே’ படத்தின் மீதிக்கதை.

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பவர்களை மது போதை எப்படி ஆட்கொள்கிறது, அதனால் அவர்கள் தன்னைத்தானே எப்படி எல்லாம் இழிவுப்படுத்திக் கொள்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதையை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் பிரித்திவிராஜ் ராமலிங்கம்

பழைய கல்லூரி தோழி கிருஷ்ண வேணியாக மைனா நந்தினி, அவரது கணவராக வரும் ஆடுகளம் முருகதாஸ் இருவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் காளி வெங்கட், தையல்காரராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், வெட்டியானாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அறிவுரை தரும் போஸ் வெங்கட் எல்லோரும் அங்கங்கே வந்து கவனம் பதிக்கிறார்கள்

ஓர் இரவில் நடக்கும் கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் இருட்டிலேயே படமாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சவாலான காட்சிகளை நேர்த்தியான முறையில் ஒளிப்பதிவு செய்த கேமராமேன் மதன் குணதேவ் பாராட்டுக்குரியவர்.

கோவிந்த் வசந்தாவின் இசை கதையை தொந்தரவு செய்யாமல் படத்துடன் இணைந்து இயல்பாக பயணிக்கிறது.

கதை என்பதை விட, ஒரு சாமானியனின் போதை இரவில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் வழியாக அவனது குணமும் வாழ்க்கையும் சுயசரிதைபோல் விரித்துக் காட்டப்படுவதுதான் படம். இன்றைய சமுதாயத்தைப் பெரிதும் ஆட்டிப்படைக்கும் ஒரு விசயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அதை ஒற்றைப் பார்வையில் பார்க்காமல் பதினாறு கோணங்களிலும் பார்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர் என்.அரவிந்தன்..