சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக பணியாற்றும் மோகன்லால் ஒரு கட்டத்தில் அந்த வேலையை விட்டுட்டு தேனியில், மனைவி, ஒரு மகள், ஒரு மகன் என்ற அளவான தனது குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார், அது தான் தனது உலகம் என்று வாழும் மோகன்லாலுக்கு அவருக்கு பழைய அம்பாசிட்ட கார் மீதும் அளவு கடந்த பாசம்..
இந்நிலையில் ஒருநாள் அவர் சென்னை சென்று திரும்புவதற்குள், சிறிய பழுது காரணமாக மெக்கானிக் செட்’டில் அவர் விட்டுச்சென்ற காரில் மெக்கானிக் செட்’டில் வேலை பார்த்தவன் கஞ்சா வைத்து பிடிபட்டதாக காரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கிறார் எஸ்.ஐ பினு பப்பு. எந்த காரணத்திற்காகவும் காரை தர முடியாது என்று அவர் கறார் காட்டுகிறார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு அங்கு வரும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வர்மாவிடம் மோகன்லால் தனது நிலையை கூற, உடனே காரை திருப்பி தர கூறிவிடுகிறார் பிரகாஷ் வர்மா. அதற்கு கைமாறாக அவர்கள் இருவரையும் ஒரு திருமண விசேஷ வீட்டில் இறக்கிவிட வேண்டிய சூழல் உருவாக, இன்ஸ்பெக்டரின் நல்ல குணத்திற்காகவும் காரை விடுவித்த நன்றிக்கடனுக்காகவும் ஒப்புக்கொள்கிறார் மோகன்லால். ஆனால் அந்த இரவு பயணம் அவரது வாழ்க்கையையே திசைமாற்றி போடுகிறது.. என்ன நடந்தது என்பதற்கு மீதிப்படம் விடை சொல்கிறது.
மோகன்லால் தனது இயல்பான நடிப்பால் குடும்ப மனிதனாகவும், பின்னர் அதிரடி கதாநாயகனாகவும் கைத்தெளிவாக நடித்துள்ளார். குறிப்பாக அடக்க ஒடுக்கமாக இருப்பவர் ஆவேசம் கொள்ளும்போது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிக்கும் விதமாக க்ளைமாக்ஸ் நெருங்கும்போது சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார் மனிதர்.
ஷோபனாவின் அமைதியான நடிப்பு கதைக்கு வலுவாக உள்ளது. பிரகாஷ் வர்மா (இன்ஸ்பெக்டர்) மற்றும் பினு பப்பு (எஸ்ஐ) போன்றோர் தங்களது வேடங்களில் உறுதியோடு செயல்பட்டுள்ளனர். பாரதிராஜாவின் சிறப்பு தோற்றம் கூடுதல் கவர்ச்சியாகும். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா, இளவரசு மற்றும் சென்னை எப்பிசோட் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, இயற்கையின் அழகை கதையின் பாகமாக மாற்றுகிறது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் கதைக்களத்தை விவரிக்கும் பாடல்களும், கதைக்களத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்யும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. .
எளிமையாக குடும்ப பாங்கான படமாக ஆரம்பித்து அதன்பின் நடக்கும் காட்சி அனைத்தும் ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் போன்று சென்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கும் ஒரு படைப்பைக் கொடுத்து விட்டார் இயக்குனர் தருண் மூர்த்தி. மோகன்லாலை எதார்த்தமான குடும்பத் தலைவராகவும், மாஸான ஆக்ஷன் ஹீரோவாகவும் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தருண் மூர்த்தி, ஆணவக் கொலை பற்றி இன்னும் கூட அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்..
.