வதந்தி ; விமர்சனம்

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் எஸ். ஜே. சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் இந்த வலைதள தொடருக்கு ஒளிப்பதிவு மற்றும் சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். புஷ்கர் காயத்ரி இந்த வெப் சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி பகுதியை சுற்றி இந்த தொடர் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் ஒரு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அது மிகப்பெரிய ஹீரோயின் என்று ஊடகங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், இறந்ததாக சொல்லப்படும் ஹீரோயின் உயிருடன் தான் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இறந்தது அந்த பகுதியை சேர்ந்த பெண் என்பது தெரியவருகிறது. போலீசாரின் விசாரணையை ஒப்புக்கொள்ளாத நீதிமன்றம் சிறப்பு அதிகாரியாக எஸ்ஜே சூர்யாவை நியமிக்கிறது. பின்பு அவர் எப்படி இந்த கொலையை கண்டுபிடிக்கிறார் என்பதை பல சுவாரஸ்யங்களுடன் சொல்லப்பட்டு இருக்கிறது வதந்தி தொடர்.

எஸ்ஜே சூர்யா வழக்கம் போல நடிப்பில் அசத்தி இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார். கொலையை அவர் துப்பறியும் காட்சிகள் பிரமாதம்.

லைலாவிற்கு சர்தார் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. வழக்கம் போல தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எழுத்தாளராக நாசர் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக உள்ளார். வதந்தி தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

8 எபிசோடுகளாக இந்த வதந்தி வலைத்தளத் தொடர் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த கதையை இயக்குனர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார். பார்வையாளர்கள் யூகிக்க முடியாத வகையில் சில சுவாரசியமான திருப்பங்களை கொடுத்திருக்கிறார். உண்மையைத் தேடி காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் பயணத்தில் வரும் சுவாரசியமான திருப்பங்களே படத்திற்கு பலமாக இருக்கிறது.

போலீஸ் எப்படி ஒரு கொலையை துப்பு துலக்கும் என்பதை டீடைலாகவும், இன்ட்ரெஸ்டிங் ஆகவும் சொல்ல முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளனர். குறிப்பாக ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் கூடுதல் வலுசேர்த்து இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் நடப்பதால் அந்த பகுதி மக்கள் பேசும் மொழியையும் கதைக்குள் புகுத்தி உள்ளனர். ஒவ்வொரு எபிசோடும் முடியும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது வதந்தி.

இந்த சமுதாயத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் வதந்தி இருக்கிறது. அதில் உண்மையை கண்டுபிடிக்க தனி ஒருவனாக எஸ் ஜே சூர்யா போராடும் கதை. மொத்தத்தில் திரில்லர், க்ரைம் பாணியில் வதந்தி படம் நன்றாக இருக்கிறது.